அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கூலி தொழிலாளி கொலை வழக்கில் 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்காக போலீசார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் முத்துமணி (43). கடந்த ஜனவரி 31-ம் தேதி அருப்புக்கோட்டை புறவழிச் சாலை அருகே உள்ள கிணற்றில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது மனைவி அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (19), முனீஸ்வரன் (19), விக்ரம்கண்ணன் (19) ஆகியோரை நேற்று கைது செய்தனர். விசாரனையில், கொலை செய்யப்பட்ட முத்துமணி, இளைஞர்களை ஓரினச்சேர்க்கைக்காக வற்புறுத்தியதாகவும் அதனால் ஆத்திரமடைந்து முத்துமணியை மூவரும் சேர்ந்து தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
கேக் வெட்டி கொண்டாட்டம்: இக்கொலை வழக்கில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில், வழக்கின் குற்ற எண் 41/23 என எழுதப்பட்ட கேக் தயார் செய்யப்பட்டு, அதை அருப்புக்கோட்டை உதவி எஸ்.பி. கருண்காரட் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ. ராமச்சந்திரன், நாகராஜ பிரபு உள்பட காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடியது போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.