”ஆயுதங்களுடன் போட்டோ வீடியோ வெளியிட்டால்..” – கோவை மாநகர காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்… ”கோவை மாநகரில் வலைதள உபயோகிப்பாளர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பொறுப்பற்ற வகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு தோரணையாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள். சிலர் ஆயுதங்களை வைத்துக்கொண்டு வீடியோக்களையும் பதிவேற்றம் செய்கிறார்கள். மேற்படி ஆயுதங்களை காட்டி புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
image
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஆயுதங்களை காண்பித்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கோவை மாநகர காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
எனவே சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். எவரேனும் தேவையற்ற வகையில் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவோ, சுய விளம்பரத்திற்காகவோ, போட்டிக்காகவோ, புகைப்படமோ அல்லது வீடியோவோ அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டால் கோவை மாநகர காவல் துறையால் சம்மந்தப்பட்ட நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பின்னணி என்ன?
இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்தவர்தான் விருதுநகரைச் சேர்ந்த இளம்பெண் வினோதினி. “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ள இவர் பல சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பார்வையாளர்களை கொண்ட வினோதினி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று அவரது வாழ்க்கையையே மாற்றும் என அவர் நினைத்துக்கூட பார்த்து இருக்கமாட்டார்.
புகைப்பிடித்தவாறு பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பந்தாவாக வீடியோ ஒன்றை வெளியிட்ட வினோதினி காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார். பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த கோவை மாவட்டம் பீளமேடு காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மனம் திருந்தியவராய் மீண்டும் ஒரு வீடியோவை வினோதினி வெளியிட்டார். ஆயுதங்களுடன் ரீல் செய்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், தற்போது ஆறு மாதம் கர்ப்பிணியாக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறி காண்போரை நெகிழச் செய்தார்.
எனினும் வினோதினி செய்தது வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதாக கூறி சங்ககிரியில் இருந்த அவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் கோவைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு வருவாருக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக இருக்குமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.