வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு: காஷ்மீரில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் குன்ஜ்வானி பகுதியை சேர்ந்த ரன்ஜீத் கவுர் என்ற பெண்ணுக்கு, அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமை கிடைத்தது. தனக்கு பாராட்டு குவிந்து வருவதாகவும், முதலில் விமர்சித்தவர்கள் கூட தற்போது ஆச்சர்யமாக பார்ப்பதாக அந்த பெண் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
யூனியன் பிரதேசமான காஷ்மீரில், மத்திய அரசு உதவியுடன் ஜம்மு காஷ்மீர் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ‘உமித்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் முன்னேறவும், சுயதொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெண்கள் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளனர். பலர் வறுமையில் இருந்து வெளியேறுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
அந்த வகையில் குன்ஜ்வானி பகுதியை சேர்ந்த ரன்ஜித் கவுர் என்ற பெண், காஷ்மீரின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், தினமும் 1,500 முதல் 2 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. பயணத்திற்கு எங்கு சென்றாலும் பலரும் என்னை பாராட்டுகின்றனர். முதலில் விமர்சித்தவர்கள் கூட தற்போது ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.
எனது தைரியத்தை பார்த்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். பணத்திற்காக பெண்கள், தந்தையையோ அல்லது கணவனையோ சார்ந்து இருக்கக்கூடாது. வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க மத்திய அரசு ஆதரவுடன் செயல்படும் திட்டம் உதவியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது கணவரும் ஆட்டோ ஓட்டுநர் தான். குடும்ப கஷ்டம் காரணமாக அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். முதலில் அவர் ஏற்க மறுத்தாலும், பிறகு அவர் ஏற்றுக்கொண்டார். உடனடியாக ‘உமித்’ திட்டத்தின் கீழ் இணைந்து ஆட்டோ ஓட்டி வருகிறேன்.
எந்த வேலையை செய்வது அவமானம் கிடையாது. குடும்பத்திற்கு உதவும் போது, மற்றவர்களின் விமர்சனத்தை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்.
மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களை வேலையில்லா பட்டதாரிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ரன்ஜீத் கவுர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement