தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், ராணுவத்தை ஏமாற்றி ராஜ வாழ்க்கை வாழ்ந்து மோசடி செய்துள்ளார். கிரண் பட்டேல் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீர் சென்றார். அவர் தன்னை பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ராணுவத்திடம் தெரிவித்தார். உடனே கிரண் பட்டேலுக்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தங்குவதற்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அதோடு அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சில நாள்கள் ராணுவ பாதுகாப்போடு ஜம்மு காஷ்மீரில் வலம் வந்தார்.

மேலும் அவர் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் பனி மலை பகுதியில் நடந்து செல்லும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். அலுவலக பயணம் என்று கூறி காஷ்மீரில் எடுக்கப்படட் வீடியோக்களையும் வெளியிட்டார்.
ஜம்மு காஷீரில் ராஜவாழ்க்கை வாழ்ந்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரிகளுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதில் குஜராத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை எப்படி ஜாஷ்மீருக்கு அதிக அளவில் கொண்டு வருவது என்பது குறித்து பேசியுள்ளார். சில நாள்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிட்டு சென்ற கிரண் பட்டேல் மீண்டும் இரண்டு வாரத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வந்தார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. மாவட்ட நீதிபதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரி வந்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
ஏற்கனவே உளவுத்துறை பிரதம அலுவலக அதிகாரி என்று கூறி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக போலீஸாரை உஷார்படுத்தி இருந்தனர். உடனே கிரண் பட்டேல் குறித்து போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். இதில் கிரண் பட்டேல் போலி அதிகாரி என்று தெரிய வந்தது. உடனே போலீஸார் அவரை 5 ஸ்டார் ஹோட்டலில் வைத்து கைது செய்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை அதிகாரிகள் வெளியில் சொல்லவில்லை. செய்தியை வெளியில் விடவேண்டாம் என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டனரா என்று தெரியவில்லை.

ஆனால் 10 நாட்களுக்கு பிறகு கிரண் பட்டேலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்திலேயே போலி அதிகாரியை கண்டுபிடிக்க தவறியதற்காக இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் அவரை குஜராத் பாஜக செயலாளர் பிரதிப்சிங் வகேலா உட்பட ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்கின்றனர். அதோடு ட்விட்டர் பக்கத்தில் தான் அமெரிக்காவில் படித்தவர் என்றும், திருச்சி ஐ.ஐ.எம்.மில் எம்.பி.ஏ.படித்தவர் போலவும், பி.டெக் படித்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தன்னை பிரசார மேலாளர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.