கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், திருவட்டாறு, கடையாலுமூடு உள்ளிட்ட போலீஸ் நிலையப் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, ரப்பர் ஷீட் உலர் கூடங்களை உடைத்து ரப்பர் ஷீட்களை திருடிச் செல்வது போன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்தத் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக குலசேகரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடிவந்தனர். விசாரணையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகன் (வயது 36) என தெரியவந்தது.
இதையடுத்து ஜெகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் திருட்டு மூலமாக கிடைத்த பணத்தில் குலசேகரம் அருகே அரமன்னம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. ஜெகன் வசித்த வீட்டிலிருந்து எல்.இ.டி டிவி. வாஷிங் மிசின், பிரிட்ஜ் போன்ற பொருள்களை போலீஸார் கைப்பற்றினர். ஜெகன் சிறையில்றையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். கடந்த பல மாதங்களாக தலைமறைவாக இருந்த ஜெகன், மீண்டும் தனது திருட்டு கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக குலசேகரம் பகுதிகளில் ரப்பர் உலர் நிலையங்களில் புகுந்து ரப்பர் ஷீட் திருட்டு, கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து போலீஸார் கண்காணிப்புப் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளது பழைய கொள்ளையன் ஜெகன் என்பது தெரியவந்தது. ஜெகனை பிடிக்க போலீஸார் வலை விரித்தனர். ஆனால் அவனை பிடிக்க முடிவில்லை. இந்த நிலையில் இதற்கிடையே குலசேகரம் பகுதியில் ரப்பர் உலர் கூடத்துக்கு நள்ளிரவில் புகுந்த ஜெகன், அங்கிருந்து ரப்பர் ஷீட்டுகளை திருட முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் ஜெகனை பார்த்து சத்தம்போடவே, ரப்பர் ஷீட்டுகளை ஏற்றிச் செல்வதற்காக கொண்டு வந்த காரையும் விட்டு விட்டு ஜெகன் ஓடி தப்பிவிட்டார். அந்த காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய போது அது ஜெகனால் திருடப்பட்ட கார் என தெரியவந்தது.
இதையடுத்து குலசேகரம் காவல் நிலையம் சார்பில் “திருடன் எச்சரிக்கை” என்ற தலைப்பில் ஜெகனின் போட்டோ உடன் கடந்த பத்து நாள்களுக்கு முன் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது. அந்த போஸ்டரில், “இந்த புகைப்படத்தில் இருக்கு ஜெகன், வயது 36, த/பெ அச்சுதன் என்பவர் பல ரப்பர் ஷீட் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் மீண்டும் பல இடங்களில் ரப்பர் ஷீட் திருட்டு தொழில் செய்வதுபோல தெரிகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இவரைப்பற்றிய தகவல் சொன்னால் தக்க சன்மானம் வழங்கப்படும்” என அந்த எச்சரிக்கை போஸ்டரில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் போலீஸாருக்கே சவால் விடும் வகையில் ஜெகன் மீண்டும் தனது கொள்ளையை அரங்கேற்றி வருகிறார். நேற்று திருவட்டாறு காவல் நிலைய எல்லைப்பகுதியில் உள்ள திருவரம்பு பகுதியில் தாசன் என்பவரது வீட்டை உடைத்து உள்ளே சென்று, பீரோவையும் உடைத்து மோதிரம், காப்பு என சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த கொள்ளை பாணியை பார்க்கும்போது திருடன் ஜெகன் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலார் சந்தேகிக்கின்றனர். போலீஸுக்கே சவால்விடும் கொள்ளையன் ஜெகனை பிடிக்க போலீஸார் புதிய வியூகம் வகுத்துவருகின்றனராம்.