புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சிகளை நேற்று சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் ரங்கசாமியை கேபினட் அறையில் சந்தித்து உரையாடினர். அப்போது, மாணவிகளிடம் ரங்கசாமி கூறியதாவது: எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் என்பது அதிர்ஷ்டமான காரியம். வீட்டில் சும்மாதான் இருந்திருப்பார்கள் எம்எல்ஏவாக ஆகி இருப்பார்கள். அதற்கு நான்தான் முழு உதாரணம். ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன். வீட்டுக்கு சம்பாதித்து எதுவும் கொடுத்ததில்லை. நண்பரை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தோம். நான் நிற்க விரும்பவில்லை. என்னை லேபர் ஆபீசராக சொன்னார்கள். அதற்கும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. திடீரென தான் தேர்தலில் நின்றேன்.
நான் காங்கிரசே கிடையாது, காங்கிரசில் சீட்டு கொடுத்தார்கள். முதல் தேர்தலில் நான் வெற்றி பெறவில்லை. அப்ப என்னோட சாமி ( அப்பா பைத்தியம் சித்தர்) பார்த்தார். அவர் போடா.. போய் நில்… அடுத்த 10 மாதத்தில் தேர்தல் என்றார். சொன்னபடியே 1991ல் தேர்தல். நான் ஜெயிப்பேனா தோற்று விடுவேனா…? என குழப்பம். ஏனெனில் காசு இல்லையே…? என்று சாமியிடம் (அப்பா பைத்தியம் சாமிகள்) கேட்டேன். அவர் … போ..! என்றார். இன்று வரை ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அமைச்சர் பதவி கேட்கவில்லை. கொடுத்தார்கள். முதல்வர் பதவியும் கொடுத்தார்கள் என்று கூறினார்.
