தடை செய்யப்பட்ட டால்பின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடியதற்காக தமிழக மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டனி. இந்த நிலையில் இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில், குஜராத் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் படகில் சோதனை நடத்தினர். அந்த படகில் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள அரிய வகை டால்பின் மற்றும் சுறா மீன்களை பிடித்து பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழக மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தது இந்திய கடலோர காவல் படை. அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள டால்ஃபின்களை வேட்டையாடிய குற்றத்திற்கு வனவிலங்கு பாதுகாப்பு 1972-ஐ மீறி கடலில் டால்ஃபின்கள் வேட்டையாடுவதற்காக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.