தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: டெல்லியிலிருந்து வந்த வார்னிங்!

கொரோனா பரவல் காரணமாக உலகமே இரு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிப் போனது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னரே பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா மூன்று அலைகள் உருவாகி அடங்கியது. கடந்த ஒர் ஆண்டு காலமாக பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல தலை தூக்கி வரும் நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த மார்ச் 8ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் 2,082 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 15ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் 3,264 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 8ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் 170 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை என்பது கடந்த 15ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் 258 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 15ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா உறுதியாகும் சதவீதம் 1.99 என்ற அளவில் உள்ளது. இது இந்தியாவில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் விகிதத்தை விட 0.61 சதவீதம் அதிகமாகும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அம்ச தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். அதன்படி பரிசோதனை, நோயாளிகள் கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவற்றை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலை நுண்ணிய அளவில் ஆராயவும், சுகாதார அமைச்சகம் வழங்கிய அறிவுரைகளை பின்பற்றுவதை உறுதிசெய்து, நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க கவனம் செலுத்துமாறும் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.