புதுடெல்லி: தேசிய தடுப்பூசி தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு இந்தியாவை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முயற்சிகளை தொய்வில்லாது மேற்கொண்டு வரும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த தேசிய தடுப்பூசி தினத்தில், மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் இந்தியா அடைந்துள்ள வியத்தகுமுன்னேற்றங்களை நினைவுகூர்கிறோம். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறோம்.
இவ்வாறு பிரதமர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மரியாதை: முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “தேசிய தடுப்பூசி தினத்தில், ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களின் கடின உழைப்புக்கு முழு தேசமும் மரியாதை செலுத்துகிறது” என்று கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக அவரின் பதிவுகளை டேக் செய்து பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியை சுகாதாரப் பணியாளர்களுக்கு பகிர்ந்துள்ளார்.