உலக சமாதான ஆலயம் சார்பில், தமிழ் புத்தாண்டு வழிபாடு, ஆடி 18 வழிபாடு, புரட்டாசி பெருமாள் வழிபாடு, சஷ்டி வழிபாடு, கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி வழிபாடு, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது உலக மக்கள் நோய்கள் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ்ந்திட 108 திருவிளக்கு பூஜை உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்றது.
இந்தத் திருவிளக்கு பூஜையில், யோகா ஆசிரியை சாந்திஸ்ரீ வழிபாட்டினைத் தலைமை வகித்து நடத்தினார். பெண்கள் பெருமளவில் பங்கேற்று சரணங்களை சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். பொதுமக்களுக்குப் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஆனந்தன், கேசவராஜ், சீனிவாசன், நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் இந்த வைபவம் குறித்துப் பேசினர்.
“கடந்த சில வருடங்களாக கொரோனா, காய்ச்சல், சளி, பொருளாதாரப் பிரச்னை என உலக மக்கள் அனைவரும், மன அமைதி இல்லாமல் அல்லாடி வந்தனர். கொரோனா தாக்கத்தால், பலர் உயிரிழக்க நேர்ந்தது. இதனால், அவர்களின் உறவினர்கள் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சூழலில்தான், உலக மக்கள் மன அமைதி பெறவும், அனைவருக்கும் நன்மைகள் கூடி வரவும், குமாரபாளையம் உலக சமாதான ஆலயத்தில் 108 விளக்குகளை வைத்து, திருவிளக்குப் பூஜை நடத்தத் திட்டமிட்டோம். அதில், பெண்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டனர். இந்த விளக்குப் பூஜையை சிறப்பாக நடத்திமுடித்துவிட்டோம் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதனால், உலக மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்கள்.