‘படித்த பள்ளியை கைவிடலாமா.?’ – அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்.!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிக்கையில். ‘‘கல்வி என்பது நம் இரு கண்கள் போல. இவ்வுலகைக் காண, நம் புரிதலை வளர்த்துக்கொள்ள, புதிய மனிதர்களை சந்திக்க, புதிய புதிய இடங்களுக்குப் பயணப்பட நம்மை கல்விதான் அழைத்துச் செல்லும்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி கற்றவர்கள் இன்று உலகின் வெவ்வேறு நாடுகளில் வசிக்கிறீர்கள் உள்ளூரில் கற்ற கல்வி மூலம் கிடைத்த அறிவை பயன்படுத்தி இன்று கை நிறைய ஊதியம் பெற்று குடும்பத்தை நல்ல முறையில் பேணி வரும் பலர் இருக்கிறீர்கள்.

உங்களில் வேறு பலர் நல்ல நூல்களை வாசித்து உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் புத்திசாலிகளாக, அறமிக்கவர்களாக இப்போது இருப்பதற்கு, உங்களிடம் நல்லியல்புகள் வளர்வதற்கு நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு உதவியிருக்கும். இன்று நாம் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணம் நாம் கற்ற கல்வியே. நம்மில் பலர் அரசுப் பள்ளிகளிலோ அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ படித்தவர்களாக இருப்போம்.

ஊரில் நாம் படித்த பள்ளி எப்படி இருக்கிறது என உங்களுக்கு அவ்வப்போது யோசனை வந்து சென்றிருக்கக்கூடும். ஊருக்குச் செல்லும்போது நம்மில் எத்தனை பேர் நாம் படித்த பள்ளிக்குச் செல்கிறோம்? இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சொந்த ஊருக்குச் செல்லுதலே அரிதாகிவிட்ட சூழலில், கிடைக்கும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்குச் சென்று பார்வையிடுவதற்கான நேரம் கிடைப்பதும் கடினமே. ஆனாலும் நாம் படிக்க பள்ளியை நாம் கைவிடலாகாது.

உங்கள் ஊருக்குச் செல்லும்போது மறக்காமல் அடுத்த முறை நீங்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று பார்க்க முயலுங்கள். உங்கள் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எண்ணினாலோ, இப்போது படிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவ எண்ணினாலோ, பள்ளிக்கு வேறு ஏதேனும் ஒரு வகையில் தொண்டாற்ற எண்ணினாலோ உங்கள் பள்ளி தலைமையாசிரியரை அணுகலாம்.

சொந்த ஊருக்கு வருவதற்கு நேரமில்லை வெளிநாடுகளில் இருந்தாலோ நீங்கள் இருந்த பள்ளிக்கு உதவலாம். அதற்காகவென்றே ஓர் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் இடத்தில் இருந்தே நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். https://nammaschool.tnschools.gov.in/#/alumini என்ற சுட்டியை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்யலாம்.

ரத்த அழுத்தத்துக்கு கப்பிங் சிகிச்சை

உங்களைப் போலவே பலரும் இந்தத் தளத்தில் பதிவு செய்திருப்பார்கள். பள்ளியிலும் வகுப்பிலும் உடன்படித்த நண்பர்களின் விவரங்களையும் விரைவில் அத்தளத்தில் காணலாம். இதன் மூலம் பால்யத்தில் ஒன்றாக ஓடியாடி விளையாடியவர்களையும் நம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொண்ட தோழர்களையும் அத்தளத்தின் மூலம் கண்டுபிடித்து அவர்களோடு தொடர்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் வகுப்பு நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து உங்கள் பள்ளிக்கு உதவலாம். அல்லது தனிநபராகவும் நீங்கள் உதவலாம். பள்ளிக்கூடம் என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய பள்ளிக்கூடத்திற்கு உங்களால் இயன்றதைச் செய்ய தமிழ்நாடு அரசு உங்களை அழைக்கிறது. வாருங்கள்!’’ என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.