மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருளான பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்வதில், ஆவின் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக பால்வளத்துறையின்கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தமிழகம் முழுவதுமிருந்து நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் வரை கொள்முதல் செய்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக சரிந்து தற்போது 27 லட்சம் லிட்டருக்கும் குறைவான பாலே, கூட்டுறவு பால் சங்கங்களின் வழியாகக் கொள்முதல் ஆகிறது.

இதனால், தமிழகம் முழுவதும் ஆவின் பால் பாக்கெட்டுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், சென்னையில் கடந்த 13, 14-ம் தேதிகளில் ஆவின் பால் விநியோகம் தடைப்பட்டது. இந்தச் சூழலில், லிட்டருக்கு 7 ரூபாய் பால் விலையை உயர்த்திக் கொடுக்கவேண்டும் என்று சில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், `பாலுக்கான தொகையை அதிகரித்து தரவில்லையென்றால், பாலை ஆவினுக்குத் தரபோவதில்லை’ என்ற வேலைநிறுத்த போராட்டத்தை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இதனால், ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டபோது, “பால் விவசாயிகளுக்கான தொகையை உரிய தேதிக்கு ஆவின் கொடுப்பதே இல்லை. ஆவினுக்குப் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் தங்களின் கால்நடைகளுக்குக் கொடுக்கும் கலப்பு, உலர், பசுந்தீவனங்கள் உள்ளிட்ட இடுபொருள்களின் செலவினங்கள், ஆண்டுக்கு ஆண்டு பன்மடங்கு அதிகரித்து வருகின்றன.

செலவினங்களை ஈடுசெய்ய முடியாத காரணத்தால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கிறார்கள். இந்த நிலையில், அமைச்சர் நாசருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பால் நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் பால், பால் பொருள்கள் தட்டுப்பாடு பரவலாக இருக்கும் நிலையில், உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் கடுமையான பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, முதல்வர் இதில் உடனே தலையிட்டு பிரச்னையைச் சரி செய்ய வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக ஆவின் உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “ஆவின் நிறுவனத்துக்கு 9,376 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து தினமும் பால் கொள்முதல் ஆகிறது. அதன்படி, ஆவினுக்குப் பால் தரும் விவசாயிகளுக்கு இரண்டு, மூன்று நாள்களில் அதற்கான தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. 2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின்போது பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டது. இதையடுத்து, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், 2022 நவம்பரில் லிட்டருக்கு 3 ரூபாய் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டது. அதன்படி, பசும்பால் 35 ரூபாய் வரையும், எருமைப்பால் லிட்டர் 44 ரூபாய் வரையும் விலை வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது. இது தனியார் நிறுவனங்களைவிட நல்ல விலைதான்.

இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்கள் சிலர் இன்னும் 7 ரூபாய் கூடுதலாக விலை கேட்கிறார்கள். அது குறித்து துறை சார்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது போராட்டம் செய்யும் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் லிட்டர் பால்தான் கொள்முதல் ஆகிறது. தற்போது அது தடைப்பட்டிருப்பதால், அதற்கான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. எனவே, `ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு’ என்ற நிலை இப்போதைக்கு இல்லை. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேபோல, அந்த பால் உற்பத்தியாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றனர்.