புதுடில்லி :புதுடில்லி அரசின், ‘பீட்பேக் யூனிட்’ பிரிவின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக புதுடில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது, சி.பி.ஐ., புதிய ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதுடில்லி அரசில், ‘பீட்பேக் யூனிட்’ என்ற பிரிவை மணீஷ் சிசோடியா துவங்கியிருந்தார். அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து இந்த பிரிவு கண்காணித்து வருகிறது.
இதன் செயல்பாட்டால் அரசுக்கு 36 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக, இந்த பிரிவை துவக்கிய மணீஷ் சிசோடியா மீது மேலும் ஒரு ஊழல் வழக்கை சி.பி.ஐ., பதிவு செய்துஉள்ளது.
”மணீஷ் சிசோடியா மீது பல பொய் வழக்குகளை பதிவு செய்து, அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் திட்டம்,” என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
20ல் ஆஜராக கவிதாவுக்கு சம்மன்!
புதுடில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம், அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது. இந்நிலையில், அவரை நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. தன்னை கைது செய்ய தடை விதிக்கக்கோரி கவிதா தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, 20ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
தேஜஸ்வியிடம் 25ல் விசாரணை!
ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சம்மனை ரத்து செய்யக்கோரி புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் தேஜஸ்வி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இம்மாதம் நடக்கும் விசாரணையின் போது தேஜஸ்வியை கைது செய்யும் எண்ணம் இல்லை’ என, சி.பி.ஐ., தரப்பு உறுதி அளித்தது. இதையடுத்து, வரும் 25ல் விசாரணைக்கு ஆஜராக தேஜஸ்வி ஒப்புக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்