குவாஹாட்டி: அருணாச்சலபிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டம் பாம்டிலா அருகே பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காலை 9.15 மணியளவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் அந்த ஹெலிகாப்டர் தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் 5 குழுக்கள் அதை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் பாம்டிலாவுக்கு மேற்கே மண்டலா என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
இந்த விபத்தில் விமானி லெப்டினன்ட் கர்னல் வி.வினய் பானு ரெட்டி, துணை விமானி மேஜர் ஏ.ஜெயந்த் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிவதை அருகில் உள்ள கிராமவாசிகள் பார்த்துள்ளனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. 5 மீட்டருக்கு அப்பால் உள்ள எதுவும் பார்வைக்கு புலனாகவில்லை” என்றார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையிடம் தற்போது 200 சீட்டா மற்றும் சேடக் ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன. நீண்டகாலமாக இயக்கப்பட்டு வரும் அவற்றை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே கூறும்போது, “இந்திய ராணுவம் தனது ஒட்டுமொத்த போர்த் திறனை மேம்படுத்துவதற்காக 95 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் மற்றும் 110 இலகு ரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் படையில் இணைக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவம், விமானப் படையிடம் தற்போது 200 சீட்டா, சேடக் ரக ஹெலிகாப்டர்கள் உள்ளன.