வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: நிலை அறிக்கை, ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது.

இந்த குடிநீரை குடித்த மக்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. எனவே விசாரணையை துரிதப்படுத்த சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது,

சிபிஐ விசாரணைக்கு மாற்றி என்ன ஆகப்போகிறது?: ஐகோர்ட் கிளை  

வழக்கை சிபிஐக்கு மாற்றி என்ன ஆகப்போகிறது? அவர்களிடம் போதிய அதிகாரிகள் இல்லையே என நீதிபதிகள் கூறினர். சிபிஐக்கு வழக்கை மாற்றினால் அவர்கள் தங்களிடம் தேவையான மனிதவளம் இல்லை என்று தெரிவிப்பார்கள். சிபிஐயை விட தமிழ்நாடு காவல்துறையில் போதிய அதிகாரிகள் உள்ளதாக கருத்து தெரிவித்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி என்ன நடவடிக்கை எடுத்து? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளில் பலர் ஓய்வுபெற்று சென்றுவிட்டனர் என்று குறிப்பிட்டனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் தான் தொடர்ச்சியாக நமது நாட்டில் நடக்கிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதன் நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.