அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்டம் சாங்க் கிராமத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.
இதையடுத்து இந்த விமானம் பூம்டிலா மாவட்டத்தில் உள்ள மண்டலா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில் மேஜர் ஜெயந்த் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மேஜர் ஜெயந்த் உயிரிழந்ததற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “அருணாசலப்பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அப்போது அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த தேனியை சேர்ந்த ஜெயந்த் என்ற விமானி உயிரிழந்திருப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.