“24 மணி நேரத்திற்குள் சிகிச்சை" காப்பீட்டுத் தொகை கிடைக்குமா? நுகர்வோர் ஆணையம் சொல்வதென்ன?

“மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்கு குறைவாக இருந்தாலும், நோயாளிகளுக்கு காப்பீட்டுத் தொகை தர வேண்டும்” என்று வதோதரா நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2016-ம் ஆண்டு வதோதராவை சேர்ந்த ஜோஷி என்பவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு ரூ.44,500 செலவாகியுள்ளது. இந்த தொகைக்கான காப்பீட்டை அதன் நிறுவனத்திடம் ஜோஷி கோரியுள்ளார். அதற்கு அந்த நிறுவனமோ ஜோஷியின் மனைவி சிகிச்சைக்காக 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்க வைக்கப்படவில்லை என்றும், அதனால் காப்பீட்டு தொகை வழங்க முடியாது என்றும் கூறியுள்ளது.

இதை எதிர்த்து ஜோஷி 2017-ம் ஆண்டு காப்பீட்டு நிறுவனத்தின் மீது வதோதரா நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ஆணையம் “தொழில்நுட்பம் மிகவும் வளர்ச்சி அடைந்த இந்த காலக்கட்டத்தில் நோயாளிகளுக்கு எளிதாக 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். அதனால் இவருக்கு உரிய காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

வெல்த் லேடர் நிறுவனர் ஶ்ரீதரன்

இந்த மாதிரியான செய்திகளை காணும்போது மருத்துவக் காப்பீடு குறித்து நமக்கு சந்தேகம் எழலாம். இந்த மருத்துவக் காப்பீடு விபரங்களைப் பற்றி நமக்கு வெல்த் லேடர் நிறுவனர் எஸ். ஶ்ரீதரன் முழுமையாக விளக்குகிறார்.

மருத்துவ காப்பீடு

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவத்திற்கான செலவுத் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒருவருக்கு எப்போது உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று சொல்லவே முடியாது. இந்நிலையில் சாமானிய மனிதன் சிகிச்சைக்காக கடன் வாங்குவான் அல்லது தன்னிடம் உள்ள பொருட்களை விற்பான் அல்லது தன்னுடைய சேமிப்புகளை செலவழிப்பான். இதற்கெல்லாமான நல்ல தீர்வு தான் “மருத்துவக் காப்பீடு”.

மருத்துவக் காப்பீடு

இன்னும் தெளிவாக கூறவேண்டுமானால், ஒருவருக்கு எதிர்பாராத விபத்து, நோய் பாதிப்பு போன்றவை ஏற்படும்போது, அதனால் ஆகும் செலவுகளில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பது தான் மருத்துவக் காப்பீடு ஆகும்.

குழந்தைகளுக்கு Family Floater Insurance!

குழந்தைகளுக்கு காப்பீடு இருக்கிறதா? என்ற கேள்வி எழலாம். அதற்குதான் Family Floater Insurance. Family Floater Insurance என்பது ஒரு திட்டத்தின் கீழ் மொத்த குடும்பத்திற்கும் காப்பீடு வழங்குவது ஆகும். இந்த திட்டத்தின் மூலம் பிறந்த 15 நாளான குழந்தை முதல் 18 வயதான சிறுவர் சிறுமியர்களுக்கும் காப்பீடு வழங்கப்படும். 18 வயதுக்கு பின்னர் தனிநபர் மருத்துவ காப்பீடு செய்துகொள்ளலாம்.

குழந்தை

மருத்துவக் காப்பீட்டில் கவரேஜ் தரப்படாத நோய்கள்: பொதுவானவை

  • அழகு சம்மந்தமான சர்ஜரிகள்

  • மது, போதைப்பொருட்களால் ஏற்பட்ட நோய்கள்

  • IVF போன்ற கருத்தரிப்பு சிகிச்சைகள்

  • தற்கொலை முயற்சி உள்ளிட்ட அவர்களாலே ஏற்படும் காயங்கள்

மருத்துவக் காப்பீட்டில் கவரேஜ் தரப்படும் நோய்கள்

  • உயர் ரத்த அழுத்தம்

  • கேட்டராக்ட்(Cataract)

  • இதய நோய்கள்

  • புற்றுநோய்

  • சர்க்கரை நோய்

  • கொரோனா

  • HIV AIDS

உள்ளிட்ட கடுமையான நோய்கள் மற்றும் விபத்துக்கள்

கொரோனா வைரஸ்

மருத்துவக் காப்பீட்டில் கவனிக்க வேண்டியவை…

  • மருத்துவக் காப்பீடு எடுக்கும் முன், குறிப்பிட்ட அந்த காப்பீட்டில் என்னென்ன நோய்களுக்கு கவரேஜ் வழங்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும்.

  • அடுத்ததாக வெயிட்டிங் பீரியட்டை பார்க்க வேண்டும். காப்பீடு எடுத்து இவ்வளவு காலங்களுக்கு பிறகு தான் காப்பீட்டின் நன்மை கிடைக்கும் என்று இருக்கும். அதனால் இந்த வெட்டிங் பீரியட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சையின் போது பாலிசிதாரர் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டவேண்டும். அதற்கு இணைக் கட்டணம் என்று பெயர். காப்பீட்டை எடுக்கும் முன் இணைக் கட்டணம் எத்தனை சதவீதம் என்பதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.

  • காப்பீட்டில் மருத்துவமனையில் நோயாளிகள் தங்கியிருக்கும் அறையின் வாடகை தொகையும் கணக்கு செய்யப்படுகிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

  • Restoration benefit – ஓராண்டுக்குள் பாலிசி கவரேஜ் தொகை முழுமையாக எடுக்கப்பட்டுவிட்டால், மேலும் அந்த பாலிசி மூலம் சிகிச்சை எடுக்க முடியாது. இந்த சூழ்நிலையில், சற்று கூடுதல் பீரிமியம் கட்டி காப்பீட்டு தொகையை அதிகரித்துக்கொள்ளும் வசதி இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

  • நீங்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வர்க்கில் இருக்கும் மருத்துவமனைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி நெட்வர்க்கில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்போது, காப்பீட்டு நிறுவனமே நேரடியாக பணம் கட்டிவிடும். அப்படியில்லாத மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும்போது முதலில் நீங்கள் மருத்துவமனையில் பணம் கட்டிய பிறகுதான் காப்பீட்டு தொகையை பெற முடியும்.

மருத்துவக் காப்பீடு
  • மருத்துவக் காப்பீட்டில் காப்பீட்டு நிறுவனமே பணம் வழங்குகிறதா? அல்லது Third Party Administrator (TPA) மூலம் பணம் வழங்குகிறதா? என்பதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள். TPA மூலம் பணம் பெறும்போது காலதாமதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நீங்கள் காப்பீடு எடுக்கும் நிறுவனத்தில் வழங்கப்பட்ட இழப்பீடு (Incurred Claim) குறைவாக இருக்கிறதா? என்பதை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ளுங்கள். அப்படி இருக்கும்பட்சத்தில்தான் அந்த நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்க முடியும்.

  • மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பீரிமியம் தொகை அதிகமா? குறைவா? என்பதை தெரிந்துகொள்வது போல, மேலே குறிப்பிட்டவைகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    வதோதரா நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு…

    சில காலங்கள் முன்னால் வரைக்கும் 24 மணி நேரம் வரைக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால்தான் காப்பீட்டு தொகையை பெற முடியும் என்று இருந்தது. ஆனால் தற்போது உள்ள நவீன காலக்கட்டத்தில் இந்த நிபந்தனையில்லாமல் பல காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்கி வருகிறது. மேலும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே கண்புரை போன்ற நோய்களுக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.