தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அருணாச்சலபிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனி மாவட்ட வீரர் மேஜர் ஜெயந்த் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.
அருணாச்சலபிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி உள்ளிட்டோர் சென்றனர். பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை தேடியுள்ளனர். பல மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் விழுந்து கிடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு, ஹெலிகாப்டர் எரிந்து புகைந்து கொண்டிருந்தது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தியதில், அவர்களின் பெயர்கள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்தது. இதையடுத்து, விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேஜர் ஜெயந்தின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட இருக்கின்றது.
இந்த நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உயிரிழந்த வீரர் மேஜர் ஜெயந்த் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மேஜர் ஜெயந்த் அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.
அவரை இழந்து வாடும் நண்பர்கள், குடும்பத்தினர், சக ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.