அருணாச்சலபிரதேசத்தில் உள்ள கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று முன்தினம் காலை புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டரில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி உள்ளிட்டோர் சென்றனர். பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் ஹெலிகாப்டரில் பயணம் செய்த ராணுவ அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தியதில், அவர்களின் பெயர்கள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று தெரியவந்தது. இதையடுத்து, விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேஜர் ஜெயந்தின் உடல் தனி விமானத்தில் நேற்று நள்ளிரவு, 1:30 மணிக்கு மதுரை வந்தது.
விமான நிலையத்தில் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலதிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கே உடலுக்கு பொதுமக்கள் பலரும் கணீர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் ஜெயமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த்தின் தந்தை, ” மேஜர் ஜெயந்த் நாட்டிற்காக நிறைய சாதித்து இருக்கின்றார். அதனால் திருப்தியாக இருக்கிறேன். மகன் ஜெயந்த் இறந்தது வருத்தமாக இருகிறது ஆனால், நாட்டிற்காக என் மகன் சேவையாற்றி இருப்பது பெருமையாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.