அண்ணாமலை கேட்ட அரியர்ஸ் ரூ.29,000… அப்ப மோடி சொன்ன ரூ.15 லட்சம்? வறுத்தெடுத்த டிஆர்பி, வாழப்பாடியார் மகன்கள்!

தமிழக பட்ஜெட் 2023-24 இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டமான பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் அறிவிப்பு இடம்பெற்றது. வரும் செப்டம்பர் மாதம் முதல் தகுதியான பெண்களுக்கு மட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலை கோரிக்கை

இதற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.

அரியர்ஸ் தொகை

வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும் போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29,000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மடை மாற்றாமல் தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

ரூ.15 லட்சம் என்னாச்சு?

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், வாழப்பாடி ஆறுமுகத்தின் மகனுமான ராம சுகந்தன், நீங்கள் பிரதமர் மோடியை அனைவரது வங்கி கணக்கிலும் 18 சதவீத வட்டி உடன் (2014ஆம் ஆண்டு முதல்) தலா 15 லட்ச ரூபாயை செலுத்துமாறு கேட்கலாமே? எனக் குறிப்பிட்டுள்ளார்.

டி.ஆர்.பி ராஜா வலியுறுத்தல்

இதேபோல் திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, ஆட்சிக்கு வந்து 9 வருடங்களுக்குப் பிறகும், ‘15,00,000 ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி பாஜகவுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையே. வரும் தேர்தலுக்கு முன்பாவது இந்த தொகை வழங்கப்படுமா? இதுவரையிலான 106 மாத வட்டித் தொகையையும் சேர்த்து 75,00,000 ரூபாயாக வழங்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.

அமித் ஷா விளையாட்டு

அதோடு 15 லட்சம் தருவோம் என்று அமித் ஷா விளையாட்டுக்கு சொன்னார் என்று மடை மாற்றாமல், இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 15 லட்சம்+ 18 சதவீத வட்டியுடன் சேர்த்து 75 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பலரும் பாஜக சொன்ன 15 லட்ச ரூபாய் எங்கே?

உடனே வட்டியோடு சேர்த்து உரிய தொகையை வங்கிக் கணக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி மாதந்தோறும் விலை ஏற்றம் காணும் எரிவாயு விலை ஏறாமல் இருந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். அதை பிரதமர் மோடியிடம் அண்ணாமலை வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.