கம்பத்தில் இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும்: தெருவில் அமர்ந்து படிக்கும் குழந்தைகள்

கம்பம்: கம்பத்தில் இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி திருநெல்வேலியில் பொருட்காட்சி திடல் அருகே, 100 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை, வருவாய் துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒவ்வொரு பள்ளிகளாக சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வு நடத்தினர். ஒவ்வொரு குழுவிலும் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், செயற்பொறியாளர், உதவி கல்வி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மாவட்டம் முழுவதும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், குடிநீர் குழாய் அமைப்பு, தண்ணீர் பயன்பாடு நிலவரம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டன.

பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு சார்ந்தும் ஆய்வு செய்யப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலான பழைய கட்டிடங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு தகுதியற்ற கட்டிடங்களை இடிக்க அறிவுறுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகம் முழுவதும் 1600 பள்ளிகளை மறுசீரமைக்க வேண்டி இடிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் அப்போதைய தேனி கலெக்டர் முரளிதரன் மாவட்ட முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள 95 பள்ளிக்கூடங்களை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் இடிக்கப்பட்டன. ஆனால் இன்று வரை ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையில், இடிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு புதிய மாற்று கட்டிடம் கட்டவில்லை. இதனால் அங்கு பயின்று வந்த குழந்தைகள் தெரு ஓரங்களில் படித்து வருகின்றனர்.

கம்பம் ஊராட்சிக்குட்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஒன்றாவது வார்டு நேரு ஹரிஜன காலனியிலும், கூட்டுறவு சங்கம் ரோட்டிலும் இருந்த இரண்டு அங்கன்வாடி மையங்கள் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடிக்கப்பட்டது. இரண்டு அங்கன்வாடி மையங்களிலும் சேர்த்து 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்த நிலையில் கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை பராமரித்து வருகின்றனர். ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் 25 குழந்தைகளுக்கு மேல் படித்த நிலை மாறி தற்சமயம் பெயரளவில் 10 குழந்தைகள் மட்டுமே வருகின்றனர்.

அங்கன்வாடி மையங்கள் இடிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் ஆன நிலையிலும் புதிய கட்டிடங்கள் கட்டாததால் குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சுருளிப்பட்டியை சேர்ந்த மொக்க ராஜ் கூறுகையில், பழுதடைந்த கட்டிடங்களாக இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுருளிப்பட்டியில் இருந்த இரண்டு அங்கன்வாடி மையங்கள் இடிக்கப்பட்டன. ஆனால் இன்று வரை புதிய கட்டிடம் கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இரண்டு அங்கன்வாடி மையங்களிலும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த நிலையில் முறையான கட்டிடம் இல்லாத காரணத்தினால் தனிநபர் குடியிருப்புகளில் அங்கன்வாடி மையங்கள் மாதந்தோறும் 500 ரூபாய் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

முறையான மையங்கள் இல்லாததால் குழந்தைகளின் வருகை குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களும் முறையாக இல்லை. குழந்தைகள் விளையாட போதிய இடமில்லை. மொத்தத்தில் தற்போது பதினைந்து குழந்தைகள் மட்டுமே வருகின்றனர். இந்த விவகாரங்களில் புதிய கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து புதிய அங்கன்வாடி மையம் கட்ட உத்தரவிட வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.