தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, தமிழ் வளர்ச்சிக்கும், பண்பாட்டுக்குமான திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:

1. தாய் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரது படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்காக அரசால் ரூ. 5 கோடி மானியமாக வழங்கப்படும்.

3. தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும். தமிழ்மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

4. கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த பயணங்கள் நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப் பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும்.

5. நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பினை கருத்திற்கொண்டு அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில் மேலும் 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும்.

6. பார் போற்றும் நம் கலைப் பண்பாட்டினை இளைய தலைமுறையினர் அறிந்து மகிழும் வகையில் சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். நாட்டுப்புறக் கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களின் பகிர்வினைக் கொண்டாடுவதற்கும் நல்வாய்ப்புகளை இவ்விழாக்கள் ஏற்படுத்தும். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 11 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

7. நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும் இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும் மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

8. கடல் பல கடந்து, சமர் பல வென்று இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப்பேரரசு. தமிழரின் கலை, இசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து பாரெங்கும் பரவின. உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்காலை கலைப் பொருட்கள், நினைவுச்சினங்களைப் பாதுகாக்கவும் தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.