`ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான எதிரி சொத்துகள்!' – விற்பனை நடைமுறையைத் தொடங்கியிருக்கும் மத்திய அரசு

ஏராளமானோர் இந்தியாவிலிருந்து பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கும், போருக்குப் பிறகு சீனாவுக்கும் சென்று அந்த நாடுகளில் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு சென்றவர்கள் ரூ.1 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான தங்களது சொத்துகளை இந்தியாவிலேயே விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இதை இந்திய எதிரி சொத்து பாதுகாவலர் (சி.இ.பி.ஐ) பாதுகாத்து வருகிறார். இதற்காக எதிரி சொத்து பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தச் சொத்துகளை விற்கும் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியிருக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான்

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “எதிரி சொத்துகளை அப்புறப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதன் கீழ் எதிரி சொத்துகளை அகற்றுவதற்கான செயல்முறை, இப்போது சொத்துகளை விற்கும் முன்பு மாவட்ட மாஜிஸ்டிரேட் அல்லது துணை ஆணையர் உதவியுடன் தொடங்கப்படும்.

ரூ.1 கோடிக்குக் குறைவான மதிப்புள்ள எதிரி சொத்துகளில், பாதுகாவலர் முதலில் குடியிருப்பாளரிடம் வாங்குவதற்கு முன்வருவார். வாங்குவதற்கான வாய்ப்பை குடியிருப்பாளர் மறுத்தால், எதிரியின் சொத்துகள் வழிகாட்டுதல்களில் குறிப்பிட்ட நடைமுறையின்படி விற்பனை செய்யப்படும்.

மேலும், ரூ.1 கோடி முதல் ரூ.100 கோடி வரை மதிப்பு கொண்ட எதிரி சொத்துகள், மத்திய அரசால் தீர்மானிக்கப்படும். எதிரி சொத்து ஒழிப்புக் குழுவால் தீர்மானிக்கப்படும் விகிதத்தில், மின்னணு ஏலத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும். இதை பப்ளிக் என்ட்டர்பிரைஸ் மெட்டல் ஸ்க்ராப் ட்ரேடு கார்ப்பரேஷன் என்ற மின்-ஏல தளம் மேற்கொள்ளும்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ள எதிரி சொத்துகள் பற்றிய தேசிய கணக்கெடுப்பை மத்திய அரசு தொடங்கியது. அவை கண்டறியப்பட்ட பிறகு, அவற்றைப் பணமாக்குவது குறித்து கடந்த மார்ச் 4-ம் தேதி அறிக்கை அளித்தது.

இதன்படி நாட்டில் எதிரி சொத்துகள் எனப்படும் மொத்தம் 12,611 நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2021-22-ம் ஆண்டு அறிக்கையின்படி எதிரிகளின் சொத்துகள், பெரும்பாலும் பங்குகள் மற்றும் தங்கம் போன்ற அசையும் சொத்துகளை விற்றதன் மூலம் அரசு ரூ.3,400 கோடிக்கு மேல் சம்பாதித்திருக்கிறது.

ஆனால், எதிரியின் அசையா சொத்துகள் எதுவும் இதுவரை விற்கப்படவில்லை. எதிரி சொத்துகளை பணமாக்குவதை மேற்பார்வையிட உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் குழுவை உள்துறை அமைச்சகம் 2020-ல் அமைத்தது. CEPI வசமுள்ள 12,611 சொத்துகளில், 12,485 பாகிஸ்தானியர்களுக்கும், 126 சீனக் குடிமக்களுக்கும் சொந்தமானவை.

அமித் ஷா

அதிக எண்ணிக்கையிலான எதிரி சொத்துகள் உத்தரப் பிரதேசத்தில் (6,255) இருக்கின்றன. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் (4,088), டெல்லியில் (659), கோவாவில் (295), மகாராஷ்டிராவில் (208), தெலங்கானாவில் (158), குஜராத்தில் (151), திரிபுராவில் ( 105), பீகாரில் (94), மத்தியப் பிரதேசத்தில் (94), சத்தீஸ்கரில் (78), ஹரியானாவில் (71), கேரளாவில் (71), உத்தரகாண்டில் (69), தமிழ்நாட்டில் (67), மேகாலயாவில் (57), அஸ்ஸாமில் (29), கர்நாடகாவில் (24), ராஜஸ்தானில் (22), ஜார்கண்டில் (10), டாமன், டையூவில் (4), ஆந்திரா, அந்தமானில் தலா ஒரு எதிரி சொத்துகள் இருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.