நெருக்கம் காட்டும் சவுதி – ஈரான்; பின்னணியில் சீனா – ‘கவனிக்கும்’ உலக நாடுகள்

தெஹ்ரான்: மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. இந்த நிலையில், தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரு நாடுகளுக்கு இடையேயான வெறுப்பை மறந்து பரஸ்பர உறவை மேம்படுத்த சீனா அரசியல் தூதராக மாறியது உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

முன்னதாக, ஈரான் முன்னாள் அதிபர் ஹசன் ரவ்ஹானி ஆட்சியில் இருக்கும்போது சவுதியுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தற்போது ஈரானி அதிபராக உள்ள இப்ராஹிம் ரைசி தொடர்ந்து வருகிறார். அதன் ஓர் அங்கமாக, இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாகவும், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன.

மேலும். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியை அதிகாரபூர்வமான அரசியல் பயணத்திற்கு சவுதி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்றை சவுதி மன்னர் சல்மான் ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக வசிக்கும், மதகுருவைத் தலைவராகக் கொண்ட நாடான ஈரானுக்கும், சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்டு, முழுமையான முடியாட்சி கொண்ட நாடான சவுதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை இருந்து வந்தது. இதற்கிடையில்தான் புது மோதல் வெடித்தது. அதாவது, சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும், இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இரு நாடுகளும் தூதரகங்களை மூடின. இந்த நிலையில், சீனாவின் உதவியுடன் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.