வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – சட்டப்பேரவை ஏப்.21 வரை நடைபெறும் என அப்பாவு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பேரவைக் கூட்டம் ஏப்.21-ம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பேரவையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மார்ச் 21-ம் தேதி (இன்று) தாக்கல் செய்கிறார்.

22-ம் தேதி விடுமுறையாக இருப்பதால், 23, 24 மற்றும் 27, 28-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு அமைச்சர்கள் பதில் உரை அளிப்பார்கள். அத்துடன் விவாதம் முடிவுறும்.

தொடர்ந்து மார்ச் 29-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி, ஏப்.21-ம் தேதி வரை நடைபெறும்.

தினமும் காலையில் 10 மணிக்கு தொடங்கி 2 மணி வரை கூட்டம் நடைபெறும். சில நாட்களில் மாலையிலும் கூட்டம் நடக்கும். காலை நேரத்தில் மட்டுமே கேள்வி நேரம் இடம்பெறும்.

இருக்கை விஷயத்தை அதிமுக தரப்பில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருக்கை பற்றி அவர்கள் பேசவில்லை. கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சினை பற்றி அவர்கள் பேசுவார்கள்.

ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை அமைச்சர் கொண்டுவரும்போது, பேரவையில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் வரும் மார்ச் 23-ம் தேதி, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது. அன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது.

பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29-ம் தேதி தொடங்கும் நிலையில், ஏப்.20,21-ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் கவனிக்கும் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

ஏப்.21-ம் தேதி முதல்வரின் பதில் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நிறைவு பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.