பாதிரியார் மீது 2 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆபாச வீடியோ பரப்பியவர்களுக்கு வலை: குமரி எஸ்.பி பரபரப்பு பேட்டி

நாகர்கோவில்: ‘இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் மீது இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அவரது லேப்டாப்பில் இருந்து இளம்பெண்களின் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை பரப்பிய நபர்களும் கைது செய்யப்படுவார்கள்’ என எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் கூறினார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29), இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப் சாட்டிங் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை வரும் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைதாகும் போது அவரிடம் இருந்து லேப் டாப் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த லேப்டாப்பில், தேவாலயங்களில் நடந்த நிகழ்ச்சிகளின் வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்தன. வேறு எதுவும் சந்தேகத்துக்குரிய வீடியோக்கள், புகைப்படங்கள் இல்லை. இந்த  லேப்டாப்பில் வீடியோக்கள், புகைப்படங்கள் அழிக்கப்பட்டதா? என்பதை கண்டறியும் வகையில், சாப்ட்வேர் மூலம் லேப்டாப்பை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகளை சைபர் கிரைம் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் இன்னும் இரு வாரங்களில் பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விடும் என போலீசார் கூறி உள்ளனர்.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாக இருந்த கால கட்டத்தில், போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக அடிக்கடி சிம்கார்டுகள், செல்போன்களை மாற்றி உள்ளார். அந்த வகையில் 11 சிம்கார்டுகள் வரை அவர் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 சிம்கார்டுகள் கர்நாடகா சிம்கார்டுகள் ஆகும். இவை யார் பெயரில் வாங்கப்பட்டன? பாதிரியாருக்கு உதவியவர்கள் யார்? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக விடுமுறையில் இருந்த, குமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் நேற்று பணிக்கு திரும்பினார்.

அவர் அளித்த பேட்டியில், ‘பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தற்போது சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள், தடயங்களை சேகரித்து வருகிறோம். இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் பாதிரியாரை காவல் எடுத்து விசாரிப்பார்கள். பாதிரியாரின் லேப்டாப், செல்போன்களில் உள்ள இளம்பெண்களின் வீடியோக்கள், போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த படங்கள், வீடியோக்கள் எங்கிருந்து முதலில் வெளியானது என்பது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில்  ஒரு பிரிவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். பெண்களின் ஆபாச படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்கள், ஆதாரங்கள் இருந்தால்  84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வழக்கை திசை திருப்பும் வகையில், சமூக வலை தளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.’ என்று கூறினார்.

* நாகர்கோவிலில் இருந்து வேறு சிறைக்கு மாற்றம்?
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனி அறையில் உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை தனி அறையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று வரை அவர் யாரையும் சந்திக்கவில்லை. நாகர்கோவிலில் இருந்தால், நண்பர்கள், உறவினர்கள் சந்திக்க வரலாம் என்பதால் இதை தவிர்க்கும் வகையில், தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் உயர் அதிகாரிகள் இதில் முடிவு எடுக்கவில்லை. தேவைப்படும் பட்சத்தில் பாளை சிறைக்கு அவர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.