அதிகரிக்கும் கரோனா பரவல்: முன்னெச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி அலர்ட்

புதுடெல்லி: கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொது சுகாதார தயார் நிலை மற்றும் சூழ்நிலை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிட்-19 தொற்று பரவலை எதிர்கொள்வதற்கான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள், தடுப்பூசி முகாம்கள், கோவிட்-19 அவசரகால நடவடிக்கைகள் மற்றும் இன்ஃப்ளூயன்சாவை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களில் கோவிட்-19 தொற்று பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை செயலாளர், சர்வதேச அளவிலான கோவிட்-19 சூழ்நிலை குறித்தும், இந்தியாவில் தொற்று அதிகரிப்பு குறித்தும் உரையாற்றினார். இந்தியாவில் கோவிட்-19 தொற்று சற்று அதிகரிப்பது குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதாவது, 2023, மார்ச் 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக புதியதாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 888- ஆக இருந்ததாகவும், வாரந்திர தொற்று பாதிப்பு 0.98 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஐஎன்எஸ்ஏசிஓஜி ஆய்வகங்களில் தொற்றுக்கான மரபியல் கூறுகளை கண்டறிதலின் அவசியம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதன்மூலம் உரிய நேரத்தில் புதிய நோய் உருமாற்றங்களை கண்டறிய முடியும் என்றும், மருத்துவமனை வளாகங்களில் நோயாளிகள், சுகாதார நிபுணர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் முககவசங்களை அணிதல் உள்ளிட்ட கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். கூட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், “ஐஆர்ஐ/எஸ்ஏஆர்ஐ பாதிப்புகளை திறம்பட கண்காணித்தல், இன்ஃப்ளூயன்சா, சார்ஸ்-சிஓவி-2, அடினோ வைரஸ் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளை மாநிலங்களுடன் இணைந்து கண்காணிக்க வேண்டும். இன்ஃப்ளூயன்சா, கோவிட்19-க்கான போதிய மருந்துகள் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் போதுமான மருத்துவ படுக்கைகள், சுகாதார மனித வளங்கள் ஆகியவற்றை உறுதிசெய்தல் வேண்டும்.

கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது. பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கோவிட் வழிகாட்டு நெறிமுறை, ஆய்வக கண்காணிப்பு மற்றும் அனைத்து கடுமையான சுவாச நோய் (எஸ்ஏஆர்ஐ) ஆகிய 5-மடங்கு திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். நமது மருத்துவமனைகள் அனைத்துத் தேவைகளுக்கும் தயாராக இருப்பதை உறுதிசெய்ய, மாதிரி ஒத்திகைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்” என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஸ்ரா, நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், பிரதமரின் ஆலோசகர் அமித் கரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஆலோசனை: நாடு முழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கரோனா தொற்று அதிக அளவில் பதிவாகும் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார். அதில், “சில மாநிலங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உள்ளூர் அளவில் பரவுவதே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. எனவே, மேற்கொண்டு பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களிலும் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 5,30,831 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 0.02 சதவீதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் 98.79 சதவீதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.65 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் மற்றும் அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் கரோனா பரவலை சமாளிப்பதற்கான தயார் நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.