புகார் மேல் புகார்.. கூட்டணி முறிவு? அல்லது ராஜினாமா? டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை!

Tamil Nadu Political News: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று காலை 11 மணிக்கு டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். வருகிற 26 ஆம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

அதிமுக கட்சியில் இணையும் பாஜகவினர்
கடந்த சில மாதங்களாகவே அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஓரம் கட்டப்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதேபோல கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி கட்சியில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார். அதேபோல பாஜக மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு தலைவராக இருந்த சிடிஆர். நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜக ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணன் மற்றும் ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் போது பலர் கட்சியில் இருந்து விலகி, கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதிமுக-பாஜக இடையே கருத்து வேறுபாடு
தமிழக பாஜகவில் இருந்து சிலர் விலகி செல்வது குறித்து பேசிய அண்ணாமலை, “கட்சியிலிருந்து சிலர் சென்றது நல்லதுதான். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. அதற்கான நேரமும் காலமும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என நேரடியாகவே அதிமுக-வை கடுமையாக சாடியிருந்தார். அதேநேரத்தில் அதிமுகவினரும் கடுமையாக பாஜகவை விமர்சித்தனர்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்?
சமீபத்தில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தில் நாம் தனியாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை நான் தான் அறிவிப்பேன் எனப் பேசியதாகக் கூறப்படுகிறது. 

புதிய கூட்டணி அமையுமா?
இதன்காரணமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுக உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டால், அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவை ஒருங்கிணைத்து புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் எனவும் தகவல்கள் கசிகின்றனர். 

அண்ணாமலை டெல்லி பயணம்
தேசிய தலைமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுப்பில் இருக்கும் நிலையில், வருகிற 26 ஆம் தேதி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.