`போலி’ பிரதமர் அலுவலக அதிகாரியுடன் தன் மகனுக்குத் தொடர்பு?- குஜராத் முதல்வர் அலுவலக அதிகாரி ராஜினாமா

ஜம்மு காஷ்மீரில், கிரண் பாய் படேல் என்பவர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி ராணுவத்தின் பாதுகாப்போடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்மீர் அரசு அவருக்கு இஸட் ப்ளஸ் பிரிவுப் பாதுகாப்பும் வழங்கியது. அவரின் மோசடி வெளிச்சத்துக்கு வந்ததால், கடந்த 2-ம் தேதி அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஆனாலும் இரண்டு வாரம் அவரின் கைது குறித்து அரசு அதிகாரிகள் வெளியில் சொல்லாமல் இருந்தனர். கடந்த 15-ம் தேதிதான் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரின் மோசடி, உயரதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் இந்த மோசடியில், கிரண் பாய் படேலுடன் அமித் ஹிதேஷ், ஜெய் சிதாபரா ஆகியோருக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிரண் பாய் படேல்

இதில் அமித் ஹிதேஷ் குஜராத் பா.ஜ.க ஐடி பிரிவு நிர்வாகியாக இருந்துவந்தார். அமித் ஹிதேஷ், ஜெய் இருவரின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் காஷ்மீர் போலீஸார் சேர்க்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரித்துவிட்டு விட்டுவிட்டனர். இரண்டு பேரையும் போலீஸார் சாட்சியாக மட்டுமே சேர்த்திருக்கின்றனர். ஆனாலும் அமித் ஹிதேஷை குஜராத் பா.ஜ.க கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறது. அமித் ஹிதேஷின் தந்தை ஹிதேஷ் பாண்டியா குஜராத் முதல்வர் அலுவலகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர்

பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி தன் மகன் மோசடி செய்திருப்பது தெரியவந்தவுடன் ஹிதேஷ் பாண்டியா தன் அரசுப் பணியை ராஜினாமா செய்திருக்கிறார். முதல்வர் பூபேந்திர பட்டேலிடம் தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில், “என் மகன் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனாலும் பிரதமர் மற்றும் முதல்வர் அலுவலகங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், “என் மகன்மீது நம்பிக்கை இருக்கிறது. அவன் இது போன்ற காரியத்தில் ஈடுபட மாட்டான்” என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் மூன்று பேரும் பா.ஜ.க பெயரைப் பயன்படுத்தி ஒவ்வோர் இடத்துக்கும் சென்று ராஜ வாழ்க்கை வாழ்ந்துவந்தது தெரியவந்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.