2025-ம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி – பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலக காசநோய் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: காசநோயை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.

கடந்த 9 ஆண்டுகளில், காசநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியா, ஊட்டச்சத்தை மேம்படுத்துதல், புத்தாக்கத்தின் மூலம் சிகிச்சை, தொழில்நுட்பத்தின் முழுப்பயன்பாடு, ஆரோக்கியம், நோய் தடுப்பு, ஃபிட் இந்தியா, யோகா போன்ற பல முன்னெடுப்பு திட்டங்களை செய்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நோயாளிகளை இணைத்துள்ளோம். மேலும், காசநோய் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். காச நோயாளிகள் அதிகம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தியுள்ளோம். கிராமத்தில் ஒரு காசநோயாளி கூட இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

உலகம் முழுவதும் காசநோயை ஒழிக்க 2030-ம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 80 சதவீத காசநோய் மருந்துகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ரோப்வே திட்டம்: பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாரணாசி கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து காசி விஸ்வநாதர் கோயில் காரிடார் வரை பொதுமக்கள் செல்வதற்கான ரோப்வே திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் ரூ.1,780 கோடியில் 28 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ரோப்வே கார் திட்டமானது, 3.75 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைகிறது. இதற்கு மட்டும் ரூ.645 கோடி செலவிடப்படவுள்ளது.

பின்னர் விழாவில் பிரதமர் பேசியதாவது: வாரணாசிக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 7 கோடி சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் வந்துள்ளனர். தற்போது பொதுமக்கள் வசதிக்காக கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் முதல், வாரணாசி விஸ்வநாதர் கோயில் காரிடார் வரை ரோப் கார் திட்டம் அமைகிறது.

இதன்மூலம் கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் வரமுடியும். வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு செய்யப்படுகின்றன.

மேலும் லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் முதல் வாரணாசிக்கு வான் வழி இணைப்பை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 8 முதல் 9 ஆண்டுகளில் காசி விஸ்வநாதர் கோயில் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செய்துள்ளோம்.

பனாரஸ் எனப்படும் காசி நகரின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நாடே பேசுகிறது. பனாரஸ் சேலைகள், மரத்தாலான விளையாட்டுப் பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனர். விளையாட்டை மேம்படுத்த விரைவில் இங்கு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

ரூ.300 கோடியில் பகவான்பூரில் கழிவுநீர் சுத்திகிரிப்பு மையம், சிக்ரா ஸ்டேடியத்தில் 2, 3-வது கட்ட திட்டங்கள், 3 லட்சம் மக்கள் பயன் பெறும் அளவுக்கு 19 குடிநீர் திட்டங்கள், சேவாப்புரியில் எல்பிஜி காஸ் நிரப்பும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.