திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்: இந்து முன்னணி 

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புராதன அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து வரும் 29-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்துவது என இந்து முன்னணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று(26-ம் தேதி) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சிவா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார், நகரத் தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டத் தலைவர் கோ.மகேஷ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ”திருவண்ணாமலையில் வரலாற்று சிறப்புமிக்க 17-ம் நூற்றாண்டு புராதன அம்மணி அம்மன் மடத்தை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இடித்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து, இந்து சமய அறநிலையத் துறையின் செயலை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்து முன்னணி சார்பில் வரும் 29-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ”திருவண்ணாமலை நகரை ஆன்மிக நகரமாக அறிவிக்க வேண்டும். திருவண்ணாமலை மற்றும் மாட வீதியில் இந்து சமய அறநிலையத் துறை கண்காணிக்கும் கோயில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மடம் மற்றும் காலியிடங்களை மீட்க வேண்டும், திருவண்ணாமலை அடுத்த ஆனந்தல் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்ற வேண்டும், திருக்கோவிலூர் சாலையில் உள்ள பவித்திரம் புதூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளால் பேருந்து நிறுத்தம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், செங்கத்தில் 600 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோயிலில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி சுற்றுசுவர் அமைக்க மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு கட்டண தரிசனத்தை நீக்கிவிட்டு அனைத்து பக்தர்களுக்கும் கட்டணமில்லா தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.