மக்களவைத் தேர்தல் 2024: அண்ணாமலை போடும் தப்பு கணக்கு: இதை நம்பினால் கரை சேர முடியாது!

அதிமுகவோடு ஒட்டிக் கொண்டிராமல் தங்களது தலைமையில் அணியை அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அண்ணாமலை. டெல்லி தலைமைக்கு தனது நிலைப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி அவர்களையும் சம்மதிக்க வைத்துவிடுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அண்மையில் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்த அண்ணாமலை முக்கிய ஃபைல் ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்துள்ளார். தனித்து நின்று வெற்றி பெறலாம் என அண்ணாமலை உறுதியாக நம்புவதற்கு 2014 தேர்தல் முடிவுகளையே உதாரணமாக கூறுகிறாராம்.

அந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே, கொமதேக, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 37 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை தர்மபுரியில் பாமக அன்புமணி ராமதாஸும், கன்னியாகுமரியில் பாஜக பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் 2019 தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த போது 39 இடங்களில் அதிமுகவுக்கு மட்டும் 1 இடம் கிடைத்தது. பிற இடங்களை முழுவதுமாக திமுக கூட்டணி கைப்பற்றியது.

எனவே 2014 போல பாஜக தலைமையில் ஒரு அணி அமைத்து அதில் தேமுதிக, பாமக, அமமுக, ஓபிஎஸ், சசிகலா, புதிய நீதி கட்சி, ஐஜேகே, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கலாம் என்பது தான் அண்ணாமலையின் திட்டமாக உள்ளது.

ஆனால் 2014 போல நிலைமை 2024இல் இல்லை என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. “2014இல் காங்கிரஸ் எதிர்ப்பு அலை நாடு முழுவதும் அதிகமாக இருந்தது. திமுக எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் வலுவாக இருந்தது. ஆனால் தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு இருக்கிறது.

பாஜக கூட்டணியில் அப்போது இடம்பெற்ற தேமுதிகவின் வாக்கு வங்கி அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. 2011இல் அக்கட்சியின் வாக்கு வங்கி 7.9%ஆக இருந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 0.84 % ஆக குறைந்து போனது.

அதேபோல் 2014இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பாஜகவுக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம் என்ற மனநிலை இருந்தது. ஆனால் இந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு அலை வலுவாக வீசுகிறது. எனவே தனித்து நின்றால் கரை ஏறுவது கடினம்.

மாநிலத் தலைவராக இருந்து கொண்டு தனது மாநிலத்தில் கட்சியை சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால் தற்போதுள்ள சூழல் என்ன, அடிக்கும் காற்று யாருக்கு சாதகமாக இருக்கிறது, இப்போது பதுங்க வேண்டுமா, பாய வேண்டுமா என்பதெல்லாம் அனுபவப்பட்ட அரசியல்வாதிக்கு நன்றாக தெரியும். போகிற போக்கில் நாலு வார்த்தைகளை காட்டமாக சொல்லி விட்டு பிரஸ் மீட்டை முடிப்பது போல் தேர்தலை அணுக முடியாது என்பதை அண்ணாமலைக்கு சொல்ல வேண்டும்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.