”10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி”-சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறுதீனி, பள்ளிக்கல்வி மற்றும் சாலை வசதிகளுக்கான  உட்கட்டமைப்புக்கு தேவையான அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா அறிவித்தார்.
அதன்படி, “மாநகராட்சிப் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வு பெற்று NEET, JEE, CLAT போன்ற போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும்.
12ம்வகுப்பு தேர்வில் பாடங்களில் 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை 1000 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாலை நேர சிறு தீனி வழங்கப்படும். அதற்கும் தொகை ஒதுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
image
மேலும்,
மாநகராட்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் ‘சிங்காரச்சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78 கிமீ நீளத்திற்கு ரூ.55.61 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும் என்றும், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.149.55 கோடி மதிப்பில் 251 கிமீ சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.327.63 கோடி செலவில் 425 கி. மீ நீளத்திற்கு சாலைகள் மறுசீரமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணிகளுக்க 1487 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.

குடியிருப்பு பகுதிகளில் உள்ள புகார்களை நேரடியாக மேயரை சந்தித்து தீர்வுக்கான “மக்களைத் தேடி மேயர்” என்ற திட்டம் உருவாக்கப்படுவதாகவும், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

image
சென்னையில் நகர்ப்புற சுகாதார மையங்கள், திடக்கழிவு மேலாண்மை, முதியவர்கள் வரி செலுத்த ஆன்லைன் முறை, தூய்மைப் பணியை கண்கானிக்க 105 சிசிடிவி  கேமிரா அமைக்க 2.20 கோடி ஒதுக்கீடு மற்றும் 289 வாகனங்களில் 1.08 கோடியில் ஜிபிஎஸ் கருவி அமைக்கப்படும் என அறிவிப்பு செய்தனர். அதேபோல் விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்கள் பராமரிக்க புதிய நடைமுறை போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றது.
2023-24ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சிக்கு 4,131.70 கோடி வருவாய், 4,466.29 கோடி செலவு. மூலதன வரவு 3,554.50 கோடி, மூலதன செலவு 3,560.16 கோடியாக உள்ளது. இதன்படி கடந்த நிதி ஆண்டில் 770 கோடியாக இருந்த நிதி பற்றாகுறை  340.25 கோடியாக குறைந்துள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின் முழு வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்..https://www.youtube.com/watch?v=PMEVL_aU4zgSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.