கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!

டெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  மீண்டும் ஆட்சியமைக்கும் என நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் முதற்கட்டமாக 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிவித்தது.

அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது 93 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. மூன்று கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில தேர்தல் பணிகளை கவனிக்க ஒன்றிய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டனர். கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். மே 13ல் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதனால் கர்நாடக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி; காங்கிரஸ் ஊழல் செய்வதில் கடுமையாக ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.