களைகட்டிய ராமநவமி கொண்டாட்டம் மோதலால் 12 பேர் காயம்| 12 injured in Ramnavami clash

புதுடில்லி,நாடு முழுதும் ஊர்வலங்கள், பஜனைகள் என ராமநவமி கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், மஹாராஷ்டிரா உட்பட ஒரு சில மாநிலங்களில் மோதல் சம்பவங்கள் அரங்கேறின.

திருமாலின் ஏழாவது அவதாரமான ராமர் அவதரித்த நாள், ராமநவமியாக கொண்டாடப்படுகிறது.

உற்சாகம்

இதையடுத்து, தலைநகர் புதுடில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று ராமநவமி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கோவில்களில் வழிபாடு, ஊர்வலம் என விழா களைகட்டியது. அதே நேரத்தில் சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்தன.

புதுடில்லியின் ஜஹாங்கீர் பகுதியில், ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவியது. பின், குறிப்பிட்ட பாதையில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதராவில், ராமநவமி ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதில், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் உள்ள கிராத்புரா பகுதியில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்கனவே மோதல் வெடித்த நிலையில், இது ராம நவமி விழாவில் எதிரொலித்தது-.

ஊர்வலத்தின் போது நடந்த கலவரத்தில் கற்கள், பெட்ரோல் பாட்டில்கள் வீசப்பட்டன. மோதலைத் தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 12 பேர் காயம் அடைந்தனர்.

ஊர்வலம்

மேற்கு வங்கம் முழுதும் பல்வேறு இடங்களில், ராம நவமியை ஒட்டி பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.

ஹவுரா, கராக்பூர், பாரக்பூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த பேரணிகளில் பங்கேற்றோர் வாள், திரிசூலம் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் சென்றதால் பதற்றம் நிலவியது.

ஹவுராவின் காஸிபாரா பகுதியில் ஊர்வலம் கடந்து செல்கையில், வன்முறை வெடித்து தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.