கலாசேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்… ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது என்ன?

CM Stalin On Kalakshetra Sexual Abuse Issues: கலாஷேத்ரா கல்லூரி  மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை, பாமக உறுப்பினர் அருள் ஆகியோர் சிறப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்தனர். 

‘காவல்துறை மென்மைபோக்கு’

அப்போது பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி,”கலாஷேத்ரா கல்லூரியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல. தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது காவல்துறை கூட சற்று மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு  ஆதரவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

இந்த சிறப்பு கவனத்திற்கு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,” ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் கலாஷேத்ரா கல்லூரி மீது தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து பாலியல் தொல்லை என ட்விட்டர் செய்தி போட்டு, கடந்த மார்ச் 21ஆம் தேதி அன்று நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதியது. 

இதுதொடர்பாக, கலாஷேத்ரா நிர்வாகிகள் நமது மாநில காவல்துறை நிர்வாகிகளை சந்தித்து அந்நிறுவனத்தில் பாலியல் புகார் ஏதும் இல்லை என தெரிவித்தனர். பின்னர் தேசிய மகளிர் ஆணையமே தாங்கள் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி அடிப்படையில் அவ்வாறு செய்தி அறிவித்தோம் அந்த விசாரணையை முடித்து விட்டோம் என மார்ச் 25ஆம் தேதி அன்று டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தனர். 

மீண்டும் விசாரணை

பின்னர், மார்ச் 29ஆம் தேதி அன்று, மீண்டும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் கலாஷேத்ரா கல்லூரிக்கு வந்து அங்கு இருக்கக்கூடிய 210 மாணவிகளிடமும் விசாரித்து சென்றுள்ளார். அப்போது காவல்துறை தங்களுடன் வர தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்.  இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 

மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு 

இந்த நிலையில் மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின் விளைவாக கலாஷேத்ரா அறக்கட்டளை  கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன் மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்தேன்.

இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்கள் அறிவதற்காக வருவாய் கோட்ட அலுவலர் வட்டாட்சியர் காவல்துறை ஆணையர் மற்ற அலுவலர்களை அனுப்பி அங்கே விசாரணை மேற்கொண்டார்கள். இன்று காலையில் மீண்டும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் அங்கே சென்று மாணவிகள் மற்றும் நிர்வாகத்தோடு பேசி வருகின்றனர் மேலும் அங்குள்ள மாணவிகளின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அங்கு ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் குழு, பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். 

அரசை பொருத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார். 

மாணவிகளின் கோரிக்கை

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின், ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களின் போராட்டம் காரணமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி மாணவர்கள், துணைப் பேராசிரியர் உட்பட தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள், நான்கு ஆசிரியர்களால்
எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமை மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் குறித்து மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். 

மாணவர்களின் பிரதிநிதியை உள்ளடக்கிய கல்லூரி புகார் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | நரிக்குறவர் சமூக ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு – ரோகிணி தியேட்டர் கொடுத்த விளக்கம் என்ன?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.