மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரிலுள்ள படேல் நகரில் இருக்கும் ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் நேற்று ராம் நவமி கொண்டாட்டத்தின்போது திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். அவர்கள் அங்குள்ள கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருந்த மூடி போன்ற மேல் தளத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்நேரம் பாரம் தாங்காமல் கிணற்றின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதனால் அதன் மேல் இருந்தவர்கள் அனைவரும் கிணற்றில் விழுந்துவிட்டனர். 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விழுந்தனர். கிணற்றுக்குள் விழுந்தவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு உயிர் பிழைக்க முயன்றனர். இதனால் பலர் உயிரிழக்க நேரிட்டது. அதோடு அதிகமான குழந்தைகளும் உள்ளே விழுந்திருந்தனர்.

போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் 17 பேர் மீட்கப்பட்டனர். நேற்று முழுக்க மீட்புப்பணி நடந்தது. பகலில் நடந்த மீட்புப்பணியில் 15 பேரின் உடல்கள் மட்டும்தான் மீட்கப்பட்டது. பலர் காணாமல்போயிருந்தனர். கிணற்றில் அதிகமானோர் சிக்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் நேற்று இரவு மீட்புப்பணிக்கு ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படைகளும் வரவழைக்கப்பட்டன. இரவு முழுவதும் நடந்த மீட்புப்பணியில் இதுவரை 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இளையராஜா தெரிவித்திருக்கிறார்.
நேற்று இரவுவரை 24 பேரும், இன்று காலைவரை 35 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் மீட்புப்பணி நடந்து வருகிறது. மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது என்றும் ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் இது குறித்துப் பேசுகையில், “சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மாநில அரசு தரப்பில் 5 லட்சம் அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.