\"தாயம் ஒன்னு\".. பகடைகளை உருட்டி தள்ளினாரே.. இப்ப எடப்பாடிக்கு பெரிய்ய்ய சிக்கலே இதான்.. திமுக அலர்ட்

சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவில் நிறைய சவால்கள் காத்திருந்தாலும், அந்த ஒரே விஷயத்தில் மட்டுமே அவர் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் திமுகவுக்குதான் பிளஸ் ஆகிவிடும் என்கிறார்கள் விவரமறிந்தோர்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ளார்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை தன்கையில் கொண்டு வந்துள்ளார்.

விஸ்வரூபம் எடுத்துள்ள திமுகவை ஒருபக்கம் சமாளிக்க வேண்டி உள்ளது.. சளைக்காமல் நீதிமன்றத்தை நாடிவரும் ஓபிஎஸ்ஸையும் சமாளிக்க வேண்டி உள்ளது.. மறுபக்கம் பாஜகவையும் அனுசரித்து போக வேண்டி உள்ளது.. இதற்கு நடுவில், தன்மீதான, தன் தரப்பு மீதான வழக்குகள், புகார்களையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

டஃப் தினகரன்

இப்படி நாலாபக்கமும் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே நிறைய இடர்பாடுகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வேண்டிய நிலைமையும் உருவாகி உள்ளதாம்.. குறிப்பாக, கொங்குவில் திமுகவுக்கு டஃப் தர வேண்டி உள்ளது, தென்மண்டலத்தில் செல்வாக்கை பெருக்கி, தினகரனின் வாக்கு வங்கியை உடைக்க வேண்டி உள்ளது.. ஆனால், இவைகள் எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியமான பிரச்சனை, “சீனியர்களின்” அதிருப்திதானாம்.. ஈரோடு இடைத்தேர்தலுக்கு எடப்பாடி தயாராக இருக்க மற்ற சீனியர்களிடம் அந்த உத்வேகம் காணப்படவில்லையாம்..

 பொருமல்கள்

பொருமல்கள்

காரணம், “எடப்பாடி தன்னை நிரூபிப்பதற்காக, இப்படியெல்லாம் செய்ய வேண்டி உள்ளது.. ஆனால் நாங்கள் ஏன் இதில் தலையை கொடுக்க வேண்டும், எங்களுக்கு இதில் லாபம் என்ன?” என்று கேட்டு ஒதுங்கிக்கொண்டார்களாம்.. இப்போது பொதுச்செயலாளராகி உள்ள நிலையில், சீனியர்களின் பொருமல்கள் அதிகரித்துள்ளதாக சொல்கிறார்கள். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதுதான்:

 புகையும் புகைச்சல்

புகையும் புகைச்சல்

“கட்சிக்குள் ஒருவரே 4, 5 பதவிகளை வைத்து கொண்டிருந்தால், கட்சியின் அதிகாரத்தை எப்படி பரவலாக்க முடியும்? பல வருடங்களாகவே மாவட்ட செயலாளராக பொறுப்பிலேயே இருப்பதால், இவர்களின் ஆதிக்கம் கூடிவிடுகிறது.. இவர்களில் சிலர் தேர்தல் சமயத்தில் எதிர்தரப்பில் தொழில்ரீதியாக கைகோர்த்து கொள்கிறார்கள். அதனால், அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.. அம்மா ஆட்சியில் இருந்ததைபோல, ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே தரப்பட வேண்டும். இன்னொரு பிரச்சனை, சீனியர்களுக்குள்ளேயே நிறைய புகைச்சல்கள் உள்ளன..

 பகடைக்காய்

பகடைக்காய்

கடந்த ஒரு வருட காலமாகவே, மதுரையில், செல்லூர் ராஜூவுக்கும், உதயகுமாருக்கும் புகைச்சல் ஓடிக் கொண்டிருக்கிறது.. காரணம், தனக்கு அடுத்தபடியாக இடத்தில் ஆர்பி உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி வைத்திருப்பதும், முக்கியமான பதவிகளை தந்து வருவதும், செல்லூராருக்கு கடுப்பை கிளப்பியதாகவும் சொல்கிறார்கள்.. தென்மண்டலத்தில் உதயகுமாரை மட்டுமே வைத்து, அச்சமூகத்தினர் வாக்குகளை பெற்றுவிட முடியாதே.. இத்தனைக்கும் செல்லூர் ராஜு, சசிகலாவின் அபிமானி என்று அனைவருக்குமே தெரியும்.. சசிகலா பக்கம் தாவப்போவதாககூட செய்திகள் அடிக்கடி எழுந்து அடங்கும்.. ஒருவேளை, அந்த அணி பக்கம் தாவினால், அது எடப்பாடிக்கே மேலும் சறுக்கலாகும்..

 முட்டல் மோதல்

முட்டல் மோதல்

அதேபோல, திண்டுக்கல் சீனிவாசனுக்கும், நத்தம் விசுவநாதனுக்கும் இன்னும் இணக்கம் கூடிவரவில்லை.. நீண்ட நாட்களாகவே, புகைந்து கொண்டிருக்கிறதே தவிர, இந்த புகைச்சலையும், அதிமுக மேலிடம் அணைக்க முன்வரவில்லை.. அதேபோல, சிவி சண்முகத்துக்கும், முனுசாமிக்கும் மோதல் அதிகரித்து வருகிறது.. 2 பேருமே சீனியர்கள்தான்.. 2 பேருமே வடமாவட்டத்தில் அசைக்க முடியாத தலைவர்கள்தான்.. 2 பேருமே எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள்தான்.. கூட்டணி மற்றும் அரசியல் தொடர்பாக, தான் வெளிப்படையாக சொல்ல முடியாத எத்தனையோ கருத்துக்களை, இவர்களின் மூலம்தான் மீடியாக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாஸ் செய்வது வழக்கம்.. தானே எல்லாவற்றையும் பொதுவெளியில் சொல்லி கொண்டிருக்க மாட்டார்.. அந்த அளவுக்கு நம்பிக்கையும், பலம்வாய்ந்த இவர்களுக்குள் ஒரு புகைச்சல் ஓடுகிறது..

 தேய்ந்து போச்சே

தேய்ந்து போச்சே

இதுபோக சில மாவட்ட செயலாளர்கள் பூசலை கிளப்பி வருகிறார்கள். தூத்துக்குடி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இன்று அதிமுக பலவீனமாகி கொண்டிருக்கின்றன. கொங்குவில் திமுகவை சமாளிக்கவே முடியவில்லை.. அதிலும் செந்தில்பாலாஜியின் வியூகத்துக்கு, எடப்பாடி தரப்பினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.. ஈரோடு இடைத்தேர்தலில், வெறும் 40 ஆயிரம் வாக்குகளை பெற முடிந்ததற்கு காரணமே, நிர்வாகிகளின் போதுமான ஒத்துழைப்பு அதிமுக தலைமைக்கு வழங்காததுதான்.. இப்படி அதிமுக வலுவாக இருந்த பகுதிகள் எல்லாம் தேய்ந்து வருவது, வருத்தத்தை தந்து வருகிறது.. அதனால், ஒருவருக்கு ஒருபதவி மட்டுமே என்பதை நிர்ணயித்து, அதிகாரத்தை பரவலாக்கி, இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்..

 தலைவலி சீனியர்ஸ்

தலைவலி சீனியர்ஸ்

சீனியர்கள் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பது, திமுக போன்ற எதிர்க்கட்சிகளுக்குதான் பலத்தை பெற்றுதரும்.. கடந்த சில மாத காலமாகவே, இந்த பிரச்சனைகள் கட்சிக்குள் ஓடிக்கொண்டுதானிருக்கிறது. அதேசமயம், சீனியர்கள் இல்லாமல் எதிர்வரும் தேர்தல்களை அதிமுகவால் சமாளிக்க முடியாது என்பதையும் எடப்பாடி பழனிசாமி நன்றாக உணர்ந்துள்ளார்.. அதனால், இந்த விஷயத்தில் ‘விட்டுப்பிடிக்க” நினைத்துள்ளதாக தெரிகிறது.. ஆனாலும், பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் உட்கார்ந்துவிட்டதால், “கண்டிப்பும்’ கொஞ்சம் தேவையாக இருக்கிறது.. எப்படியும் நல்ல முடிவை எடப்பாடி எடுப்பார் என்று நம்புகிறோம்” என்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.