இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சலீம் துரானி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) ஜாம் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 88.

1960 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி இவர் 1,202 ரன்களையும் 74 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். சௌராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பிசிசிஐ இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி துரானி கௌரவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின் 1973 ஆம் ஆண்டு நடிகை பர்வீன் பாபிக்கு ஜோடியாக சரித்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சலீம் துரானி இன்று காலமானார். இவரது மறைவிற்கு ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் விளையாடும் ஐ.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவருக்காக மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.