கோராபுட்: ஒடிசா – ஆந்திர மாநில எல்லையில் உள்ள கோடியாவுக்கு வந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கிருந்த ஆந்திர மாநில் அதிகாரிகளிடம் ‘ஆந்திராவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் எல்லை கிராமமான கோடியாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. ‘உத்கல் திவாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் கோடியாவிற்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த ஆந்திர மாநில அதிகாரிகள் சிலரை, அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்தார். அப்போது, ‘எதற்காக கோடியாக கிராமத்திற்கு வந்துள்ளீர்கள்’ என்று அந்த அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டார். அதற்கு அந்த அதிகாரிகள், ‘கோடியா பகுதியில் உள்ள 21 கிராமங்கள் ஆந்திரா மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. எனவே எங்களது பகுதி மக்களை சந்திக்க வந்தோம்’ என்றனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘ஆந்திராவுக்கு திரும்பிச் செல்லுங்கள். நான் ஒடிசாவைச் சேர்ந்தவன். கோடியா பகுதிக்குள் எந்தவொரு ஊடுருவலையும் சகித்துக் கொள்ள முடியாது. ஜெய் உத்கல் திவாஸ். ஜெய் ஒடிசா’ என்று கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.