கன்னியாகுமரி மாவட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கப்பல் ஊழியரை லாட்ஜில் அடைத்து வைத்து விடிய விடிய அடித்து உதைத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்கியதாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடியப்பட்டினத்தை சேர்ந்த ஜெயபால் கப்பலில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் 97 லட்சம்ரூபாய் கடனாக வாங்கி அதில் 90 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
பாக்கி 7 லட்சம் ரூபாயை தராத நிலையில், நாகர்கோவிலில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த ஜெயபாலை நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஜெயபால் தங்கி இருந்த அறைக்குப் பக்கத்திலேயே அறை எடுத்து, அவர் வெளியே வரும்போது மடக்கிப் பிடித்து தங்களது அறைக்கு இழுத்துச் சென்று கட்டிப்போட்டு நிர்வாணமாக்கி விடிய விடிய அடித்து உதைத்துள்ளனர். இந்த கும்பலின் நடமாட்டத்தால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் போலீசாருக்குத் தகவல் கொடுத்த நிலையில், பிடிபட்டுள்ளனர்.