பெங்களூரு: நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் முதலில் கட்சியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இதனால், அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேட்டி அளித்துள்ளார். அதில், ”எங்கள் கட்சி சொந்த காலில் நின்று தேர்தலை எதிர்கொள்கிறது. எங்கள் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன் நிறுத்துகிறது. இதற்கான பஞ்சரத்னா திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல குமாரசாமி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மைசூர் பகுதியில் மட்டும்தான் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு உள்ளது என பாஜகவும், காங்கிரசும் கூறவது சாதுர்யமான பிரசாரம். மாநிலம் முழுவதும் எங்கள் கட்சிக்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மாநிலத்தின் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் எங்கள் கட்சியில் பொறுப்புகளில் இருக்கிறார்கள். மைசூர் பகுதி எங்களுக்கு ஆதரவு அதிகம் உள்ள பகுதிதான். அதற்காக நாங்கள் அந்த மக்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். அதேநேரத்தில், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் எங்கள் செல்வாக்கு அதிகரித்தே வருகிறது. எங்கள் கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்களை எதிர்கொள்ள மிகப் பெரிய பொருட் செலவில் நிறுவனங்களை நாங்கள் அமர்த்துவதில்லை. நான் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ளேன். நான் யார் என்பதும் எங்கள் கட்சி எப்படிப்பட்டது என்பதும் கடவுளுக்கும் மக்களுக்கும் தெரியும்.
இந்த தேர்தலில் 123 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளோம். எங்களது இலக்கு பெரியது என்றும், அடைவது கடினம் என்றும் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். கடின உழைப்பை நம்பி நாங்கள் எங்கள் இலக்கை நிர்ணயித்துள்ளோம். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பாஜகவும், காங்கிரசும் மக்களிடம் பொய்களைப் பரப்புபவர்களாக இருக்கிறார்கள். வழக்கமாக அவர்கள் செய்யக்கூடியதுதான் இது. அதற்கு மேல் அவர்கள் குறித்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை. நான் எனது வேலையை சீரியஸாக எடுத்துக்கொண்டு 91 வயதிலும் தொடர்ந்து உழைத்து வருகிறேன்.
மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ், கட்சியை ஒழுங்கமைக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.