நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரகத்திலுள்ள காவல் நிலையங்களில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங் கொடூரமாகப் பற்களைப் பிடுங்கி தண்டனை கொடுத்த புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனாலும், அவருக்கு உள்ளூர் ஸ்டேஷன்களில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் துணையாக இருந்ததாகச் சர்ச்சை எழுந்தது. அதனால் அவர்கள்மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த `பல் பிடுங்கும்’ விவகாரத்தை வெளியில் கொண்டுவந்த வழக்கறிஞர் மகாராஜன் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார்.
சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், தமிழக மனித உரிமைகள் ஆணையம் சார்பாக நடைபெற்ற விசாரணையில் சாட்சியம் அளித்தவர்களும், ஏ.எஸ்.பி-க்கு உடந்தையாக உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் போலீஸாரும் இருந்ததைக் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோரை, `பற்கள் பிடுங்கப்பட்ட கொடூர சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்காமல் மறைத்திருக்கின்றனர். அதனால் அவர்கள் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்’ என நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.