விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் நம்பி கல்வி கற்க வந்த பெண்ணிடமே ஆசிரியர் அத்துமீறியுள்ளார். மேலும், பொய்களைச் சொல்லி திருமணமும் செய்துள்ளார்.
பெற்றோருக்குப் பிறகு அனைவரது வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஒருவரது வாழ்க்கையைச் செதுக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
பல இடங்களில் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், சில இடங்களில் மாணவிகளிடம் அத்துமீறுவது போன்ற மோசமான செயல்களில் ஆசிரியர்களே ஈடுபடுகின்றனர்.
ஆந்திரா
அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே கங்காவரம் மண்டல் பகுதியில் ஆசிரியர் ஒருவரே மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அங்கே உள்ள இன்டர் காலேஜ் (+1, +2 வகுப்புகள்) ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்த சலபதி (வயது 33) என்பவர் தான் தனது மாணவிகளில் ஒருவரையே ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பொய்கள்
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் எஸ்ஐ சுதாகர் ரெட்டி கூறுகையில், “கடந்த புதன்கிழமை சிறுமிக்கு இறுதி தேர்வு நடந்து முடிந்துள்ளது. அதன் பிறகு குற்றவாளி ஏதேதோ பொய்களைச் சொல்லி சிறுமியை ஏமாற்றியுள்ளார். சிறுமியை ஏமாற்றி அவர் திருப்பதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருப்பதியில் திருமணம்
தான் நேர்மையானவன் என்றும், தன்னை நம்பினால் கடைசி வரை நன்கு பார்த்துக் கொள்வேன் என்றெல்லாம் கூறியுள்ளார். மேலும், அச்சிறுமியைத் திருப்பதியிலேயே வைத்து திருமணமும் செய்துள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சலபதியின் நடத்தையில் மாற்றம் தெரிந்துள்ளது. இதனால் பயந்து போய் குழம்பிய அந்த சிறுமி உடனடியாக தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஏற்கனவே திருமணம்
அவரிடம் தனக்கு என்ன நடந்தது என்பதை முழுமையாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே அந்த சிறுமி தனது பெற்றோருடன் வியாழக்கிழமை இரவு கங்காவரம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். போலீசார் விசாரணையில் வேறு சில பகிர் தகவல்களும் தெரிய வந்துள்ளது. அதாவது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சலபதிக்கு ஏற்கனவே திருணமாகியுள்ளது.

வழக்குப்பதிவு
மேலும், ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை ஏமாற்றியுள்ளார். அந்த சிறுமி மைனர் என்பதால் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோலத் தான் அசாம் மாநிலத்தில் சமீபத்தில் மற்றொரு பகீர் சம்பவம் நடந்தது.

அசாம்
அங்கே மைனர் சிறுமி ஒருவர் தற்கொலையால் உயிரிழந்தார். அது குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், “எனது மகள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம். இருப்பினும், மைனர் என்பதால் எங்கே போலீசார் எங்களைச் சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று அஞ்சி தற்கொலை செய்து கொண்டார்” என்றார். இருப்பினும், இதை மறுத்துள்ள போலீசார், வேறு காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார்.