மும்பை, ஐந்தாயிரம் ரூபாய்க்காக ஐந்து நாட்களுக்கு மட்டும் மனைவியாக நடிக்க வந்த பெண்ணை, நிரந்தரமாக மனைவியாக்க முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 21 வயது பெண், ‘டிவி’ தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார். இவரது தோழி ஆயிஷா.
திருமணம்
இவரது கணவர் கரண், சமீபத்தில் அந்த பெண்ணிடம், ‘என் நண்பரின் மனைவியாக, அவரது குடும்பத்தினர் முன் ஐந்து நாள் மட்டும் நடிக்க வேண்டும். இதற்கு, 5,000 ரூபாய் வாங்கித் தருகிறேன்’ என்றார்.
இதற்கு சம்மதித்த அந்த இளம்பெண், சில நாட்கள் கழித்து மத்திய பிரதேசத்தில் உள்ள மண்டாசூருக்கு வந்தார். அங்கு தயாராக இருந்த கரண், அந்த பெண்ணிடம் முகேஷ் என்ற இளைஞரை அறிமுகப்படுத்தி, ‘இவருக்கு தான் மனைவியாக நடிக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு அந்த பெண் சம்மதிக்கவே, அருகில் உள்ள கோவிலில், முகேஷுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதில் முகேஷின் பெற்றோர், உறவினர்கள் பங்கேற்றனர்.
இதன்பின், முகேஷ் வீட்டுக்கு அந்த பெண் சென்றார். முகேஷின் மனைவியாக, அவரது பெற்றோர் முன் நடித்தார். ஐந்து நாட்கள் முடிந்ததும், ‘நம் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. நான் மும்பைக்கு புறப்படுகிறேன்’ என முகேஷிடம், அந்தப் பெண் கூறினார்.
தலைமறைவு
இதை ஏற்க மறுத்த முகேஷ், ‘நான் உன் மீது காதல் வயப்பட்டு விட்டேன். ஊரறிய நமக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டது. நீதான் என் மனைவி. இங்கிருந்து வெளியேற முடியாது. இதற்காக கரணுக்கு நான் பணம் கொடுத்து விட்டேன்’ என, அடம் பிடித்தார்.
விஷயம் விபரீதமாவதை உணர்ந்த அந்த பெண், இது குறித்து மும்பையில் உள்ள தன் நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அவர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, முகேஷ் வீட்டுக்கு போலீஸ் படை சென்று, அந்த பெண்ணை மீட்டது.
இதற்குள் முகேஷும், கரணும் தப்பி ஓடிவிட்டனர். கரணின் மனைவியும் தலைமறைவாகி விட்டார். மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், திருமணத்துக்கு மணமகள் கிடைப்பதில் கடும் கிராக்கி நிலவுகிறது.
இடைத்தரகர்கள், மணமகள் கிடைக்காத ஆண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, அப்பாவி பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு அதிகமாக நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.