ரஃபேல் வாட்ச் பில் வரல; ஏப்ரல் 14 திமுக ஊழல் பட்டியல் வருமா? அண்ணாமலை கையில் 10 பேர் லிஸ்ட்!

தமிழக அரசியலில் சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சமின்றி அரசியலை முன்னெடுத்து வருபவர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. தினசரி ஏதேனும் ஒரு வகையில் தலைப்பு செய்தியாகி விடுகிறார். அந்த வகையில் தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் விஷயத்தை போட்டு உடைத்து தமிழக மக்களின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தார். ஏனெனில் அது பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும், விலை பல லட்சங்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.

ரஃபேல் வாட்ச் பில்

இதற்கான பில்லை ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று அப்படி எதுவும் வெளியிடவில்லை. இதை விமர்சித்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் பதிவுகளை தெறிக்க விட்டனர். இந்த சூழலில் ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை சொன்னபடி வெளியிடுவாரா? இல்லை ரஃபேல் வாட்ச் போல் டீலில் விடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக அமைச்சர்கள் ஊழல்

இதுபற்றி பாஜக வட்டாரத்தில் விசாரிக்கையில், திமுக விஷயத்தை அவ்வளவு சாதாரணமாக விட்டு விட மாட்டோம். பட்டியல் தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. எந்தெந்த துறை சார்ந்த அமைச்சர்கள், எவ்வளவு கொள்ளை அடித்துள்ளார்கள், முந்தைய சொத்து மதிப்பு என்ன, தற்போதைய சொத்து மதிப்பு உயர்வு எவ்வளவு, எந்தெந்த பினாமிகள் மீது சொத்துகள் இருக்கின்றன,

ஏப்ரல் 14ல் வெளியீடு

துபாயில் செய்த முதலீடுகள் எவ்வளவு, எங்கெங்கு மால்கள் இருக்கின்றன போன்ற விவரங்கள் பக்காவாக தயார் செய்து வருகிறாராம். முதலில் திமுக அமைச்சர்கள் 10 பேரின் பட்டியலை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணாமலை வெளியிட உள்ளதாக தெரிவித்தனர். இந்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். பென் டிரைவ் மூலம் பத்திரிகைகள், ஊடகங்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மக்களவை தேர்தல்

இந்த பட்டியலை ஆயுதமாக பயன்படுத்தி தமிழக மக்கள் மத்தியில் திமுக எப்படிப்பட்ட கட்சி என்பதை போட்டு உடைக்கப் போகிறாராம். இதை பார்த்து மக்கள் திருந்த வேண்டும். வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜக இடம்பெறும் கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும் என கணக்கு போட்டு வைத்துள்ளார்.

அதிமுக கூட்டணி

முன்னதாக அதிமுக கூட்டணி வேண்டாம் என்று விடாப் பிடியாக அண்ணாமலை இருந்தார். இதுபற்றி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க விஷயம் தீயாய் பற்றிக் கொண்டது. சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

அதன்பிறகு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து முக்கியமான ஃபைலை அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் திமுகவினரின் ஊழல் பட்டியலை காண்பித்து ஒப்புதல் வாங்கினாரா? என்ற சந்தேகமும் எழுகிறது. இந்த சந்திப்பில் கூட்டணி விஷயம் குறித்து நாங்கள் பார்த்து கொள்கிறோம். அதைப் பற்றி பேச வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.