கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ராமநவமி ஊர்வலம் நடந்தது. இதில் மசூதி அருகே ஊர்வலம் வந்தபோது கூட்டத்தின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டது. இதில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று இரவுக்குள் கைது செய்யப்பட வேண்டும் என்று மேற்கு வங்காள ஆளுநர் சிவிஆனந்த் போஸ் அறிவுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார்.
மம்தா பானர்ஜிக்கும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவிற்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி.
ராமநவமி ஊர்வலம்
இதனால், மத்திய அரசுடன் மிகக்கடுமையான மோதல் போக்கை மம்தா பானர்ஜி கையாண்டு வருகிறார். மாநிலத்திலும் பாஜகவுடன் அடிக்கடி வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் , ராம நவமியை முன்னிட்டு மேற்குவங்காளத்தின் ஹவுரா பகுதியில் இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தின. இந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. திடீரென வன்முறையில் இறங்கிய கும்பல் வாகனங்கள் மீது கற்கள் வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது.

குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
போலீசார் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ராமநவமி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் தேச விரோதிகள், இதன் பின்னால் உள்ளவர்கள் நிச்சயம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்து இருந்தார். மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டை பாஜக அடியோடு மறுத்தது.

வன்முறைக்கு மம்தா தான் காரணம்
இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வன்முறைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், மாநில நிர்வாக மும்தான் காரணம். இந்த வன்முறையின் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் உள்ளது” என் திருப்பி பழியை போட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வார்த்தை யுத்தம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

திடீரென கற்கள் வீசப்பட்டது.
மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியில் ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய துணைத்தலைவர் திலிப் கோஷ் உள்பட பஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். டிஜே இசையுடன் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டு ராமநவமி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது மசூதி அருகே ஊர்வலம் வந்த போது திடீரென கற்கள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் காயம் அடைந்தார். மசூதியை குறிவைக்கப்படுவதாக வதந்திகள் கிளம்பியதால் இந்த வன்முறை வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம்
வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று இரவுக்குள் கைது செய்யப்பட வேண்டும் என்று மேற்கு வங்காள ஆளுநர் சிவிஆனந்த் போஸ் அறிவுறுத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வன்முறை நடைபெற்ற இடத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராம நவமி ஊர்வலத்தில் இன்று நடைபெற்ற தாக்குதலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மேற்கு வங்காள மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜுமதார் குற்றம் சாட்டியுள்ளார்.