“பிரபலங்கள் வாடகைத்தாய் வழியாக குழந்தை பெற்றுக் கொள்ளும் சம்பவங்கள் நிகழும்போதெல்லாம், நம் சமூகம் மிகப்பெரிய அளவுக்கு விமர்சிக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் எந்தச் சூழ்நிலையில் இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்களின் மனதைப் புண்படுத்த மாட்டோம்” என்கிற மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி, அதுகுறித்த தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டார்.
“சில பெண்கள் உடலளவில் ஆரோக்கியமாகவே இருப்பார்கள்; அவர்களுடைய கணவர்களின் விந்தணுக்களும் தரமானவையாகவே இருக்கும். ஆனால், அந்தப் பெண்ணின் கர்ப்பப்பை மட்டும் சிறு வயதில் ஏற்பட்ட தொற்றுகள் காரணமாக சேதமுற்று பலவீனமாக இருக்கலாம். அல்லது ஹார்மோன் சமமின்மை காரணமாக கர்ப்பப்பையின் உட்புறம் சரியாக வளர்ச்சியடையாமல் இருக்கலாம். குழந்தைப்பிறப்பைத் தள்ளிப்போடுவதற்காக ஒன்றிரண்டு அபார்ஷன் செய்துகொண்ட பெண்களுடைய கர்ப்பப்பையின் உள்வரி ஜவ்வு சேதமுற்றதாலும் இப்படி ஆகலாம். இவர்களுக்கு கருமுட்டை ஆரோக்கியமாக இருந்தாலும், கருவானது கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாது. சோதனைக்குழாய் முறையில் கரு உண்டாக்கினாலும், கரு தங்கி வளர்வதற்கான நிலையில் கர்ப்பப்பை இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் சம்பந்தப்பட்ட பெண்கள், வாடகைத்தாய் முறையை நாடுகிறார்கள்.

வாடகைத்தாய் முறையில் இரண்டு விதங்கள் கையாளப்படுகின்றன. முதல்முறையில், வாடகைத்தாயின் கருமுட்டையுடன், குழந்தை தேவைப்படும் ஆணின் விந்தணு சேர்த்து, கரு உருவாக்கப்படும். இரண்டாவது முறையில், சம்பந்தப்பட்ட கணவர், மனைவியின் கருமுட்டையையும், விந்தணுவையும் சேர்த்து, வாடகைத்தாயின் கர்ப்பப்பையில் வைப்பார்கள். அல்லது வேறு நபர்களின் கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்து வாடகைத்தாயின் வயிற்றில் வைப்பார்கள்.
இதில், யார் வாடகைத்தாயாக இருக்க வேண்டுமென்பதற்கு, 2022-ல் இந்திய அரசு `சரகசி ஆக்ட் அண்ட் கைட்லைன்ஸ்’ கொண்டு வந்தது. இதன்படி, ஒரு தம்பதியர் வாடகைத்தாய் மூலம் தங்களுக்கான குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர்களால் வேறு எந்த முறையிலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிற நிலைமையில் இருக்க வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி திருமணம் நடந்திருக்க வேண்டும்.
அதேபோல, கமர்ஷியல் வாடகைத்தாய் முறைக்கு அனுமதி கிடையாது. வாடகைத்தாயாக வருகிற பெண்மணி உறவுக்காரராக இருக்க வேண்டும். வாடகைத்தாய்க்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகி இருக்க வேண்டும். அவருக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்க வேண்டும். வயது 25-37 வரை இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தம்பதியர் அவருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். மூன்று முறை முயற்சி செய்து கரு தங்கவில்லையென்றால், வாடகைத்தாயிடம் மறுமுறை முயற்சி செய்யக்கூடாது என்கிறது சட்டம்.

இத்தனை கட்டங்களையும் கடந்துதான் வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைகள் பிறக்கின்றனர். ஒரு தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்கிற ஒரு காரணத்துக்காகவே, ‘அவங்க பாவம்… குழந்தையில்லை, ஆனா, குழந்தைக்காக ரொம்ப ஆசைப்படுறாங்க’ என்றும், ‘எதுக்கு இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கிறாங்க; இதுக்கு பதிலா ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கலாமே…’ என்றும் விமர்சிக்கிறார்கள். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதென்பது, சட்டமும், சம்பந்தப்பட்ட தம்பதியினரும் சேர்ந்து முடிவெடுப்பது… இதில் மற்றவர்களின் விமர்சனங்கள் தேவையில்லையே” என்று முடிக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.