விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குடியரசு. இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் கவியரசி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் ஜெயவர்த்தினி. ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். குடியரசு, கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு காலங்களில் நேரத்திலும் கூட குடியரசு வீட்டுக்குள்ளேயே தொடர்ச்சியாக யோகாசன பயிற்சி செய்துவந்துள்ளார். இதைப்பார்த்து ஆர்வமடைந்த அவரின் மகள்கள் கவியரசியும், ஜெயவர்த்தினியும் ஊரடங்கு நேரத்தை பயனுள்ளதாகவும், ஆரோக்கியமானதாகவும் கழிப்பதற்காகத் தந்தையைப் பின்பற்றி அவர்களும் யோகாசனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மகள்களின் இந்த ஆர்வம், குடியரசுவின் மனைவி கீதாவையும் யோகாசனம் செய்ய தூண்டியுள்ளது. எனவே, குடியரசுவும் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் என குடும்பமாக அவர்கள் 4 பேரும் கடந்த மூன்றரை வருடங்களாக தினசரி யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தந்தையின் தூண்டுகோலால் வீட்டிற்குள்ளேயே யோகாசனங்கள் செய்யப் பழகிய கவியரசியும், ஜெயவர்த்தினியும் பள்ளி திறந்த பின்பும் யோகாசன பயிற்சி எடுத்துவந்தனர்.

இதன் பலனாக, கடந்த எட்டு மாதங்களில் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளில் கலந்துக்கொண்ட சகோதரிகள் பல பரிசுகள் பெற்றுள்ளனர். தொடர்ந்து, தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்ற சகோதரிகள், சுமார் 30க்கும் மேற்பட்ட கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சைக்கிளை பரிசாக வென்று குவித்துள்ளனர்.
இந்நிலையில் ஏழாவது தேசிய யோகாசனப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில், 12வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்துக்கொண்ட ஜெயவர்த்தினி, முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் ரூபாய் 20ஆயிரம் நிதி உதவிப்பெற்று அடுத்ததாக யோகா பயிற்றுநர் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

மேலும், வருகிற டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகாசனப் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்துகொள்வதற்காக ஜெயவர்த்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, பழனியில் நடைபெற்ற மற்றொரு தேசிய அளவிலான போட்டியிலும் ஜெயவர்த்தினி சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார். இதன் பயனாக வருகிற மே மாதம் 27ந் தேதி கம்போடியா நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்பதற்காக மாணவி ஜெயவர்த்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். யோகாசனப் போட்டிகளில் சாதனைகளை படைத்த மாணவி ஜெயவர்த்தினியை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

மகளின் இந்த வெற்றி குறித்து தந்தை குடியரசு பேசுகையில், “ஆரம்பத்தில் உடல் நலத்திற்காக யோகா செய்ய ஆரம்பித்தோம். தற்போது யோகா எங்களின் வழக்கமான பணியாக மாறிவிட்டது. என்னுடைய குழந்தைகள் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்துவார்கள். மீதி நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கே பழக்கியிருக்கிறேன்.
யோகா செய்வதால் உடல் வலி, தலைவலி மற்றும் உடல் உபாதைகளின் தொல்லையின்றி இருக்கிறோம். ‘யோகா’ எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஆகவே, யோகா இல்லாமல் எங்கள் குடும்பம் இல்லை” என்றார்.

மாணவி ஜெயவர்த்தினி பேசுகையில், “கடந்த மூன்றரை வருடங்களாக யோகா செய்து வருகிறேன். கடந்த எட்டு மாதங்களில் நான் கலந்துகொண்ட அனைத்து யோகா போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். என்னுடைய லட்சியம் யோகா போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்பதுதான். அதற்காக இப்போதே பதக்கங்களை வெல்வதை லட்சியமாகக் கொண்டு பயிற்சி எடுத்துவருகிறேன். என்னை என் பெற்றோர்கள் ஊக்குவிப்பது போல, தமிழகஅரசும் கருணை கூர்ந்து எங்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என நம்பிக்கை மிளிர பேசினார்.