சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக இந்தியன் 2 படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது.
தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார்.
வேகமெடுக்கும் இந்தியன் 2
கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், எதிர்பாராதவிதமாக பல பிரச்சினைகளால் இந்தப் படம் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் ட்ராப் ஆனது. ஆனால், தற்போது மீண்டும் தொடங்கப்பட்ட இந்தியன் 2 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத், திருப்பதியை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தைவானில் அடுத்த ஷெட்யூல்
ஒரு மாதமாக சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துவிட்ட ஷங்கர், அடுத்து வெளிநாடு பறக்கவிருப்பதாக கூறியிருந்தார். அதன்படி தைவான் நாட்டில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தைவான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் பேப்பருடன் ஷங்கர் நிற்கும் போட்டோவுடன் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். ப்ளு ஜூன்ஸ், டிஷார்ட், கேப் உடன் ஸ்டைலாக நிற்கும் ஷங்கரின் போட்டோ வைரலாகி வருகிறது.

விரைவில் அடுத்த அப்டேட்
தைவானில் ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து தெரியவரும் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியன் 2 படப்பிடிப்பு முழுவதும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து டீசர், ரிலீஸ் தேதி போன்ற அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியன் 2 ரிலீஸாகும் என சொல்லப்பட்ட நிலையில், 2024 பொங்கலுக்கு தான் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்தியன் படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்போடு சூப்பர் ஹிட் அடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளனர். முதல் பாகத்தை போல இதிலும் லஞ்சம், ஊழலுக்கு எதிரான இந்தியன் தாத்தாவின் போராட்டம் தொடருமா அல்லது, புதிய கதைக்களத்தில் பயணிக்குமா என தெரியவில்லை. ஆனால், கமலுக்கு வில்லனாக மொத்தம் 6 நடிகர்கள் களமிறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் வெளியானதும் தான் இந்தியன் 2வின் ரிசல்ட் என்ன என்பதே தெரியவரும்.